டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் சச்சின், ரிஷப் பண்டை சமன் செய்த கே.எல்.ராகுல்
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் கே.எல்.ராகுல் சதமடித்தார்.;
image courtesy:ICC
லண்டன்,
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் சதமும் (104 ரன்), ஜேமி சுமித் (51 ரன்), பிரைடன் கார்ஸ் (56 ரன்) அரைசதமும் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியும் 387 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 100 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ், சோயிப் பஷீர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மண்ணில் கே.எல்.ராகுல் இதுவரை 4 சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் அதிக சதங்கள் இந்திய வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் ரிஷப் பண்ட், திலிப் வெங்சர்க்கார், சச்சின் தெண்டுல்கர் ஆகியோரை சமன் செய்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் ராகுல் டிராவிட் 6 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன் அடித்துள்ளது. ஜாக் கிராவ்லி 2 ரன்னுடனும், பென் டக்கெட் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.