டெஸ்ட் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்த தென் ஆப்பிரிக்கா

பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடந்தது.;

Update:2025-10-24 10:00 IST

image courtesy: @ProteasMenCSA

ராவல்பிண்டி,

பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 333 ரன்னும், தென்ஆப்பிரிக்கா 404 ரன்னும் எடுத்தன. 71 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்திருந்தது. பாபர் அசாம் 49 ரன்னுடனும், முகமது ரிஸ்வான் 16 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய பாபர் அசாம் முதல் ஓவரில் அரைசதத்தை எட்டினார். 2022-ம் ஆண்டுக்கு பிறகு அவர் சொந்த மண்ணில் அடித்த முதல் அரைசதம் இதுவாகும். அதே ஓவரில் பாபர் அசாம் (50 ரன்), சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முகமது ரிஸ்வானுக்கும் (18 ரன்) அவரே ‘செக்’ வைத்தார்.

முடிவில் பாகிஸ்தான் அணி 49.3 ஓவர்களில் 138 ரன்னில் சுருண்டது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஹார்மர் 6 விக்கெட்டும், கேஷவ் மகராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். மேலும் முதல் தர கிரிக்கெட்டில் ஹார்மரின் விக்கெட் எண்ணிக்கை 1,000-ஆக (உள்ளூர் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டியை சேர்த்து) உயர்ந்தது. முதல்தர கிரிக்கெட்டில் ஆயிரம் விக்கெட்டுக்கு மேல் எடுத்த 4-வது தென்ஆப்பிரிக்க வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

பின்னர் 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 12.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் மார்க்ரம் 42 ரன்னும், ரையான் ரிக்கெல்டன் 25 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க வீரர்கள் கேஷவ் மகராஜ் (இரு இன்னிங்சும் சேர்த்து 9 விக்கெட்) ஆட்டநாயகன் விருதையும், செனுரன் முத்துசாமி (106 ரன், 11 விக்கெட்) தொடர்நாயகன் விருதையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 93 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்