முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.;
image courtesy:twitter/@EmiratesCricket
சார்ஜா,
ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகள் இடையிலான டி20 ஓவர் கிரிக்கெட் தொடர் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இதில் நேற்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - யுஏஇ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பகர் ஜமான் 77 ரன்கள் அடித்தார். யுஏஇ தரப்பில் ஹேய்டர் அலி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய யுஏஇ அணியால் பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளித்து ரன் குவிக்க முடியவில்லை. 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய யுஏஇ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. யுஏஇ தரப்பில் அதிகபட்சமாக அலிஷன் ஷரபு 68 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் (3 வெற்றிகள்) மற்றும் ஆப்கானிஸ்தான் (2 வெற்றிகள்) அணிகள் தகுதி பெற்றுள்ளன. இறுதிப்போட்டி 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதுவரை ஒரு வெற்றி கூட பெறாத யுஏஇ அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இன்று நடைபெற உள்ள கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - யுஏஇ அணிகள் மோதுகின்றன.