ஆஸ்திரேலிய தொடருடன் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு ஓய்வா..? பி.சி.சி.ஐ. துணைத்தலைவர் விளக்கம்

எதிர்வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருடன் விராட் மற்றும் ரோகித் ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின.;

Update:2025-08-23 20:32 IST

image courtesy:PTI

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள் ரோகித் சர்மா, விராட் கோலி 20 ஓவர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். சர்வதேச ஒருநாள் போட்டியில் மட்டும் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளனர். ஆனாலும் பல மாதங்கள் விளையாடாமல் ஓய்வில் இருக்கும் அவர்களுக்கு ஒரு நாள் அணியில் தொடர்ச்சியாக இடம் கிட்டுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இருவரும் அடுத்த ஒருநாள் உலகக்கோப்பை (2027) வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளனர். இருப்பினும் அவர்களால் ஒருநாள் உலகக்கோப்பை வரை தொடர்ந்து பார்மில் இருக்க முடியுமா? என்பது சந்தேகம்தான்.

அந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஏறக்குறைய 27 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது. அந்த போட்டிகளில் இருவரும் தொடர்ந்து அசத்தினால் மட்டுமே உலகக்கோப்பை வரை இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடிப்பது கடினம் என பல முன்னாள் வீரர்கள் கூறியுள்ளனர். இதனிடையே ரோகித் சர்மாவுக்கு பதிலாக சுப்மன் கில் ஒரு நாள் போட்டி அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த சூழலில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான பி.சி.சி.ஐ.-ன் திட்டத்தில் இல்லை என தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதன் காரணமாக இருவரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடரே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் கடைசி சர்வதேச கிரிக்கெட் என தகவல்கள் வெளியாகின. அந்த தொடருடன் அவர்களை கழற்றி விட பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த தகவல்களுக்கு பி.சி.சி.ஐ. துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா மறுப்பு தெரிவித்துள்ளார். அத்துடன் ஆஸ்திரேலிய தொடருடன் அவர்களை கழற்றி விடும் எண்ணம் பி.சி.சி.ஐ.-க்கு இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “அவர்கள் எப்போது ஓய்வு பெற்றார்கள்? ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் இன்னும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள். எனவே அவர்கள் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கும்போது, இப்போது ஏன் விடைபெறுதல் பற்றி பேசுகிறீர்கள்? நீங்கள் ஏன் இப்போதே கவலைப்படுகிறீர்கள்? எங்கள் கொள்கை மிகவும் தெளிவானது. பி.சி.சி.ஐ. ஒருபோதும் எந்த வீரரையும் ஓய்வு பெறச்சொல்வதில்லை.

ஓய்வு குறித்து அவர்களே முடிவு எடுக்க வேண்டும். நீங்கள் இப்போதே விடைபெறுதல் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். கோலி மிகவும் பிட்டாக இருக்கிறார். அவர் தொடர்ந்து விளையாடுவார். ரோகித் சர்மா மிகவும் நன்றாக விளையாடுகிறார். ஆனால் நீங்கள் இப்போதே விடைபெறுதல் குறித்து கவலைப்படுகிறீர்கள்” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்