சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழக வீரர் பிரனேஷ் சாம்பியன்
மாஸ்டர்ஸ் பிரிவில் ஜெர்மனி வீரர் வின்சென்ட் கீமர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.;
image courtesy:twitter/@Chennai_GM
சென்னை,
3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு வீரர்கள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதினர்.
மாஸ்டர்ஸ் பிரிவில் நேற்று 9-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டங்கள் நடந்தன. முந்தைய சுற்றின் போதே பட்டத்தை உறுதி செய்து விட்ட ஜெர்மனி கிராண்ட்மாஸ்டர் வின்சென்ட் கீமர் தனது கடைசி சுற்றில் அமெரிக்காவின் ராய் ராப்சனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய கீமர் 41-வது நகர்த்தலில் எதிராளியை மடக்கினார். இந்திய வீரர்கள் அர்ஜூன் எரிகைசி- கார்த்திகேயன் முரளி இடையிலான ஆட்டம் 49-வது நகர்த்தலில் ‘டிரா’ ஆனது.
9-வது மற்றும் கடைசி சுற்று முடிவில் வின்சென்ட் கீமர் 7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அவருக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
அனிஷ் கிரி 2-வது இடத்தையும் (5 புள்ளி), அர்ஜூன் எரிகைசி 3-வது இடத்தையும் (5 புள்ளி) பிடித்தனர். அனிஷ், எரிகைசி இருவரும் ஒரே புள்ளிகளை பெற்றிருந்ததால் அவர்களுக்கு தலா ரூ.10¾ லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
முழுமையாக இந்திய வீரர், வீராங்கனைகள் மட்டுமே கலந்து கொண்ட சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழக வீரர் பிரனேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதில் நேற்று நடந்த கடைசி சுற்றின் ஒரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரனேஷ், ஹர்ஷவர்தனுடன் மோதினார். 6½ புள்ளிகளுடன் களமிறங்கிய பிரனேஷ் 46-வது காய் நகர்த்தலில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் அபிமன்யு புரானிக், லியோன் லுக் மென்டோன்கா ஆகியோருக்கு பட்டம் வெல்வதற்கான வாய்ப்பு உருவானது. ஆனால் அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள தவறினர். மென்டோன்கா மற்றும் அபிமன்யு புரானிக் தங்களது கடைசி ஆட்டங்களில் தோல்வியை தழுவினர்.
இறுதிசுற்று முடிவில் தமிழக வீரரான பிரனேஷ் 6½ புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். அவருக்கு ரூ.7 லட்சம் பரிசாக கிடைத்தது. சேலஞ்சர்ஸ் பிரிவில் பட்டம் வென்றதன் மூலம் அடுத்த ஆண்டு நடக்கும் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடரில் நேரடியாக மாஸ்டர்ஸ் பிரிவில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். அதிபன் 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், அபிமன்யு புரானிக் 6 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்தனர்