கும்பம் - குருப்பெயர்ச்சி பலன்கள்


கும்பம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
தினத்தந்தி 21 April 2023 6:45 PM GMT (Updated: 21 April 2023 6:47 PM GMT)

22-04-2023 முதல் 01-05-2024 வரை

(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்)

மூன்றில் வந்தது குருபகவான்! முன்னேற்றப் பாதை தெளிவாகும்!

சேவை செய்வதை பெருமையாக நினைக்கும் கும்ப ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 22.4.2023 முதல் 3-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். மூன்றாமிடம் என்பது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் இடமாகும். அந்த இடத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது நல்ல வளர்ச்சி ஏற்படும் என்றாலும் ஏழரைச்சனியில் ஜென்மச்சனியின் ஆதிக்கமும் இருப்பதால் அவ்வப்போது இடையூறுகளும் வரலாம். பொருளாதாரம் போதுமானதாக இருந்தாலும் மனநிம்மதி குறைவாகவே இருக்கும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டு அகலும். இக்காலத்தில் வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபடுவதோடு சுய ஜாதக ரீதியாக திசாபுத்திக்கேற்ற தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் வழிபடுவது நல்லது,

குரு இருக்கும் இடத்தின் பலன்!

நவக்கிரகங்களில் சுபகிரகமாக விளங்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் இப்பொழுது மூன்றாம் இடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். மூன்றாமிடம் என்பது சகோதர சகாய ஸ்தானம் மற்றும் வெற்றிகள் ஸ்தானமாகும். மூன்றில் உள்ள ராகுவோடு குரு இணைவதால் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பின்னால் தான் குரு பலம் பெற்று நன்மைகளைச் செய்வார்.

மன்னவன் மூன்றில்நிற்க

மாபெரும் மாற்றம்சேரும்!

எண்ணிய காரியத்தில்

இடையூறு வந்து கூடும்!

தன்னம் பிக்கையோடு

தைரியம் இணைந்திருந்தால்

எந்நாளும் நன்மைசேரும்!

இதயத்தில் மகிழ்வும்கூடும்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.

அந்த அடிப்படையில் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டிய நேரமிது. எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு இடையூறுகள் வரத்தான் செய்யும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கொஞ்சம் யோசிப்பது நல்லது. ஜென்மச் சனியின் ஆதிக்கமும் இருப்பதால் மருத்துவச் செலவுகளால் மனக்கலக்கம் ஏற்படலாம். நட்பை பகையாக்கிக் கொள்ளாமல் பார்த்துக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும்.

வெற்றிகளைக் குவிக்கும் வியாழனின் பார்வை!

இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய மூன்று இடங்களையும் பார்க்கின்றார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் பதிவதால் இல்லறம் நல்லறமாக அமையும். மனையில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு உண்டு. வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலம் அனுகூலமான தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீடு, வாகனம் வாங்க கடன் கிடைக்கும்.

குருவின் பார்வை ஒன்பதாம் இடத்தில் பதிவதால் பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகின்றது. எனவே எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமென்று நினைத்தீர்களோ அதை, அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். தீர்த்த யாத்திரைகள், தெய்வ வழிபாடுகள் போன்றவற்றில் நம்பிக்கை அதிகரிக்கும். மக்கள் சேவையின் மூலம் மகத்தான புகழைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் மேற்படிப்பு, வேலை சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

குருவின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால் லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே பொருளாதாரத்தில் உச்சநிலையை அடைவீர்கள். பணியாளர்கள் இப்பொழுது உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். பூமி வாங்கும் யோகம் முதல் புதிய தொழில் தொடங்கும் யோகம் வரை அனைத்தும் நிறைவேறும்.

நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்!

அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:

உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் அசுவதி நட்சத்திரக்காலில் கேது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது மனநிம்மதி குறையும். நேசித்தவர்களிடம் கூட யோசித்துப் பேசும் அளவிற்கு மனதைரியம் குறையும். வீடு மாற்றங்கள், இட மாற்றங்கள் நன்மை தருவதாக அமையும். தொழிலில் அதிக முதலீடுகள் செய்து அகலக்கால் வைக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். பதவி உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டுப்பிரிந்து சென்று வேறு இடத்தில் பணிபுரிய நேரிடலாம்.

பரணி நட்சத்திரக்காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:

குரு பகவான் பரணி நட்சத்திரமான சுக்ரனுக்குரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். தொழில் வியாபாரத்தில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். கூட்டாளிகளை மாற்றம் செய்ய நினைப்பீர்கள். உத்தியோகத்தைப் பொறுத்தவரை நல்ல சந்தர்ப்பங்கள் உங்களைத் தேடிவரும். இதுவரை கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் இப்பொழுது கைகூடி வரலாம். விரும்பிய இடத்திற்கு மாறுதல்கள் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி சேமிக்க முற்படுவீர்கள்.

கார்த்திகை நட்சத்திரக்காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:

குரு பகவான் கார்த்திகை நட்சத்திரக்காலில் சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியத் தொல்லை அகலும். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்றவர்களின் நட்பால் பல நல்ல காரியங்கள் நடைபெற வழிவகுத்துக் கொள்வீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். கூட்டுத்தொழில் புரிவோர் தனித்து இயங்க முற்படுவர். நண்பர்களின் ஒத்துழைப்போடு நன்மை கிடைக்கும்.

ராகு-கேது பெயர்ச்சிக்காலம்!

மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் 8.10.2023 அன்று மீன ராசிக்கு ராகுவும், கன்னி ராசிக்கு கேதுவும் செல்கின்றனர். உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் ராகுவும், எட்டாமிடத்தில் கேதுவும் இருப்பதால் சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கின்றது. அதிலிருந்து விடுபட சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது. செலவுகள் கூடும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையவில்லையே என்று கவலைப்படுவீர்கள். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலிலும் திருப்தி ஏற்படாது. இதுவரை குருவுடன் ராகு சேர்ந்திருந்தது. இப்பொழுது ராகு விலகிவிட்டதால் குரு கூடுதல் பலம் பெறுகின்றார். அவரது பார்வைக்கும் பலன் இனி அதிகம் கிடைக்கும்.

குருவின் வக்ர காலம் (12.9.2023 முதல் 20.12.2023 வரை)

இக்காலத்தில் குரு பகவான் அசுவதி மற்றும் பரணி நட்சத்திரக்காலில் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பணத்தேவைகள் அதிகரிக்கும். கைமாற்று வாங்கும் சூழ்நிலைகூட ஒருசிலருக்கு ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பங்கள் கூடும். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சரள நிலை மாறும். ஏமாற்றங்ளைச் சந்திக்க நேரிடும். வெளிநாட்டிலிருந்து மனக்கசப்பு தரும் தகவல் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட மாறுதல் திருப்தி அளிக்காமல் போய் மீண்டும் பழைய இடத்திற்கே வந்து சேரும் வாய்ப்பு உருவாகலாம். மிகவும் கவனம் தேவைப்படும் நேரமிது.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சியாகவே அமைகின்றது. பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள், பெற்றோரின் மணி விழா போன்றவைகள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. தம்பதியர் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்பட்டால் சச்சரவு வராமல் பார்த்துக் கொள்ளலாம். குருவின் வக்ர காலத்தில் கொடுக்கல்-வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய கூடிய இடமாற்றம் கிடைக்கும். குலதெய்வ வழிபாடும், குரு வழிபாடும் நன்மை தரும்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!

இல்லத்து பூஜையறையில் கற்பக விநாயகர் படம்வைத்து கவசம் பாடி வழிபடுவது நல்லது. மேலும் பிரதோஷ நேரத்தில் நந்தியம்பெருமானை வழிபட்டால் நலமும் வளமும் வந்து சேரும்.


Next Story