கும்பம் - குருப்பெயர்ச்சி பலன்கள்


கும்பம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
தினத்தந்தி 15 May 2022 6:24 PM IST (Updated: 15 May 2022 6:28 PM IST)
t-max-icont-min-icon

இரண்டில் வந்தது குருபகவான்; இனிமேல் வரவு திருப்தி தரும்

நல்லதைச் செய்தால் நல்லதே நடக்கும் என்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசியிலேயே சஞ்சரித்து வந்த குரு பகவான், 13.4.2022 முதல் தன ஸ்தானமான 2-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ராசிக்கு தன, லாபாதிபதியான குரு பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் திடீர் விரயங்கள் உருவாகும்.

குரு இருக்கும் இடத்தின் பலன்

நவக்கிரகங்களில் சுபகிரகமாக விளங்கும் குரு, உங்கள் ராசிக்கு தன, லாப ஸ்தானங்களுக்கு அதிபதியாவார். அவர் தன ஸ்தானத்திலே சஞ்சரிப்பதால் பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். நல்ல வரன்களை இப்பொழுது எதிர்பார்க்கலாம். வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்குமிடமான 2-ம் இடத்தில் குரு இருப்பதால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். அடுத்தடுத்து நல்ல சம்பவங்கள் நடைபெறும். அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வழிவகுத்துக் கொள்வீர்கள்.

குருவின் பார்வை பலன்

இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக குருபகவான் உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். எனவே அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைகின்றன. குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவது யோகம்தான். எதிர்ப்பு, வியாதி, கடன் எனப்படும் இடத்தைக் குரு பார்ப்பதால், இனி எந்த எதிர்ப்புகளும் உங்களைப் பாதிக்காது. இன்னலை ஏற்படுத்தியவர்கள், மனம் மாறி உங்கள் காரிய வெற்றிக்கு உறுதுணைபுரிவர். கடன்சுமை குறைய வழிபிறக்கும். கொடுக்கல்- வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். ஆரோக்கியத் தொல்லை அகலும். ஊர் மாற்றங்கள், இடமாற்றங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

குருவின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால் இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் உருவாகும். தடைப்பட்ட காரியங்கள் தடையின்றி, தானாக நடைபெறும். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த நோயின் கொடுமை இப்பொழுது தீரும். 'பழைய பங்குதாரர்களால் பிரச்சினைகள் வருகின்றதே, அவர்களை விலக்கிவிட்டு புதியவர்களை சேர்த்துக் கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள்.

குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணிந்து சில முடிவுகளை எடுத்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். பழைய பணியாளர்கள் விலகினாலும் தகுதியுள்ள புதிய பணியாளர்களை நியமித்து தனவரவை பெருக்கிக் கொள்வீர்கள். லாபம் அதிகரிக்கும். வங்கியில் உள்ள சேமிப்பு உயரும். போட்டிக் கடை வைத்தவர்கள் விலகுவர். புதிய திருப்பங்கள் ஏற்படும்.

நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்சுயசாரத்தில் குரு சஞ்சாரம் (13.4.2022 முதல் 30.4.2022 வரை)

உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர், பூரட்டாதி நட்சத்திரக் காலில் தனது சுயசாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். வருமானத்தை உயர்த்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய பாதை புலப்படும். உடன்பிறப்புகள் வழியில் சுபச்செய்திகள் வந்து சேரும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

சனி சாரத்தில் குரு சஞ்சாரம் (1.5.2022 முதல் 24.2.2023 வரை)

உங்கள் ராசிநாதனாகவும், 12-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சனி பகவான். உத்திரட்டாதி நட்சத்திரக் காலில், சனியின் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம்.

புதன் சாரத்தில் குரு சஞ்சாரம் (25.2.2023 முதல் 22.4.2023 வரை)

உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். ரேவதி நட்சத்திரக் காலில், புதன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, நன்மையும், தீமையும் கலந்த பலன்களே கிடைக்கும். பஞ்சமாதிபதியாக குரு விளங்குவதால், பூர்வ புண்ணியத்தின் பலனாக கிடைக்க வேண்டிய பலன்கள் அனைத்தும் கிடைக்கும். ஆனால் அஷ்டமாதிபதியாகவும் குரு இருப்பதால், போராட்டத்தின் மூலமாகத்தான் சில காரியங்களை அடைய முடியும். பூர்வீகச் சொத்துக்களில் பாகப்பிரிவினை ஏற்படும்.

குருவின் வக்ர இயக்கம் (20.7.2022 முதல் 16.11.2022 வரை)

உங்கள் ராசிக்கு தன - லாபாதிபதியான குரு, வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. எதைச்செய்தாலும், ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது. விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்க்க மறுப்பர். உடன்பிறப்புகளின் அனுசரிப்பு குறையும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு வீண்பழிகள் ஏற்படும். வழிபாட்டின் மூலமே வளர்ச்சியைக் கூட்டிக் கொள்ள வேண்டிய நேரம் இதுவாகும்.

பெண்களுக்கான பலன்கள்

இந்தக் குருப்பெயர்ச்சி நன்மை தரும். என்றாலும் விரயங்களும் அதிகரிக்கும். அதைச் சுபவிரயமாக மாற்றிக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவோடு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் - மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். சொந்த வீடுகட்டிக் குடியேறும் யோகம் ஏற்படலாம். குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

வளம் தரும் வழிபாடு

இந்தக் குருப்பெயர்ச்சி இனிய பெயர்ச்சியாக அமைய, வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குருவை வழிபடுவதோடு யோகபலம் பெற்ற நாளில் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானையும், மேதா தட்சிணாமூர்த்தியையும் வணங்கி வாருங்கள்.


Next Story