கும்பம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்


கும்பம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்
தினத்தந்தி 23 May 2022 9:43 AM GMT (Updated: 23 May 2022 9:44 AM GMT)

27-12-2020 முதல் 20-12-2023 வரை

ஏழரைச் சனிதான் தொடங்கியது! இறைவழிபாட்டால் மகிழ்ச்சி வரும்! கும்ப ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 12-ம் இடத்திற்கு வருகின்றார். இப்பொழுது ஏழரைச்சனி உங்களுக்குத் தொடங்குகின்றது. ஏழரைச்சனி என்றவுடன் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. உங்கள் ராசிநாதனாகவும், விரயாதிபதியாகவும் விளங்குபவர் சனி பகவான். எனவே யோகத்தையும் கொடுப்பார், விரயத்தையும் கொடுப்பார். விரயத்தைச் சுபவிரயமாக மாற்றிக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும்.

மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு பகவான் சஞ்சரிக்கின்றார். அவரோடு இப்பொழுது சனி பகவான் சேர்வதால் 'நீச்சபங்க ராஜயோகம்' உருவாகின்றது. உங்கள் ராசியைப் பொறுத்தவரை குரு, தன-லாபாதிபதி என்பதால் எந்தச் செயலைச் செய்தாலும் பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு செய்ய வேண்டுமென்ற நிலை ஏற்படாது.

ஏழரைச்சனி ஆரம்பம்

மிகப்பெரிய கிரகமாகச் சொல்லப்படும் சனி பகவான், உங்களுக்கு இப்பொழுது ஏழரைச்சனியாக வருகிறார். விரயச்சனி இப்பொழுது வந்திருக்கின்றது. இதற்குபிறகு ஜென்மச்சனி, அதன்பிறகு குடும்பச்சனி என்று வரும். பொதுவாக விரயச்சனி காலத்தில் அமைதியாகச் செயல்படுவது நல்லது. யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். தொழிலில் தேக்கநிலையும். தெளிவற்ற மனதுடன் செயல்படும் சூழ்நிலையும் ஏற்படும். உறவினர் களும், நண்பர்களும் செய்த உதவிக்கு நன்றி காட்ட மாட்டார்கள். இடமாற்றம், ஊர் மாற்றம் போன்றவை வருவதற்கான அறிகுறிகள் தென்படும். நினைக்க இயலாத இடத்திற்கு மாறுதல் கிடைக்கலாம்.

சனியின் பார்வை பலன்கள்

உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 2, 6, 9 ஆகிய மூன்று இடங்களிலும் பதிகின்றது. வாக்கு, தனம், குடும்பம், எதிர்ப்பு, வியாதி, கடன், தந்தை வழி உறவு, பாக்கியம், பாகப்பிரிவினை போன்றவற்றைக் குறிக்கும் இடங்களில் எல்லாம் சனியின் பார்வை பதிவதால் அங்கெல்லாம் புதிய திருப்பங்களும், மாற்றங்களும் வரப்போகின்றது. 2-ம் இடத்தில் சனி பார்வை பதிவதால் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பச் சுமை கூடினாலும் அதைச் சமாளிப்பீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும்.

சனியின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் உத்தியோகத்தில் மாற்றம் உண்டு. தொழிலைப் பொறுத்த வரை புதிய பங்குதாரர்கள் வந்திணையலாம். எதிரிகள் விலகுவர். அலைச்சலைக் குறைத்துக் கொள்ளுங்கள். மன அழுத்தத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பெற்றோர் வழியில் பிணக்குகள் ஏற்பட்டு பிறகு இணக்கம் வரும். இழந்த சொத்துக்களை மீண்டும் பெற வாய்ப்பு உண்டு. கைக்கு கிடைத்த பூர்வீக சொத்தை விற்றுவிட்டு புதிய இடம் வாங்கி மனை கட்ட வேண்டுமென்ற ஆர்வம் கைகூடும். தேவைகள் பூர்த்தியானாலும் கூட சில சமயத்தில் மனக்குழப்பம் அதிகரிக்கும். மகரத்தில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் சனி உங்கள் ராசிக்கும் அதிபதி என்பதால் அதை வழிபடுவதன் மூலம் வளர்ச்சி அதிகரிக்கும்.

சனியின் பாதசாரப் பலன்கள்

27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சுபச்செய்திகள் அதிகம் வந்து சேரும். தங்களுக்கோ, தங்கள் சகோதரர்களுக்கோ, தங்களின் பிள்ளைக ளுக்கோ கல்யாணம் போன்ற சுபகாரியங்கள், பெற்றோர்களின் பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடும் சூழ்நிலை ஏற்படும். வெளிநாட்டு ஒப்பந்தங்களும் வரலாம். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடும், உங்களின் மதிநுட்பத்தாலும் மகத்தான பலன்களை வரழைத்துக் கொள்ளும் நேரம் இது.

28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மனதில் நினைத்ததை மறு கணமே செய்யும் யோகம் உண்டு. நடக்கும் தொழிலைக் கொடுத்துவிட்டு வேறு தொழிலை செய்ய நண்பர்களின் ஆதரவைக் கேட்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு, 'வெளிநாடு செல்ல முடியவில்லையே' என்ற ஆதங்கம் தீரும். திடீரென நிர்வாகம் உங்களை வெளி நாட்டிற்கு அனுப்ப பரிசீலனை செய்வர். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். மனக்குழப்பம் அகல அனுபவஸ்தர்கள் ஆலோசனை சொல்வர். பொது நலத் தில் இருப்பவர்கள் வீண் பழிகளுக்கு ஆளாக நேரிடும்.

27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சகோதர சச்சரவுகள் அகலும். பத்திரப் பதிவிலிருந்த தடைகள் விலகும். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உங்கள் சிக்கல்கள் தீர வழி காட்டுவர். இக்காலத்தில் சனி பகவானும் உங்கள் ராசியில் சஞ்சரிக்கப் போகின்றார். ஜென்ம சனியாவதால் உடல்நலத்தில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும் பொழுது விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. முன்கோபத்தின் காரணமாகச் சில பாதிப்புகளும், முன்னேற்றத்தில் குறுக்கீடும் ஏற்படும். தொழிலில் பங்குதாரர்களும் விலகிக்கொள்வதாக பயமுறுத்துவர். எதிரிகளின் பலம் கொஞ்சம் அதிகரிக்கும் நேரமிது.

குருப்பெயர்ச்சிக் காலம்

சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடக்கிறது. கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசியிலேயே தன லாபாதிபதி உலா வருவதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, வாக்கு ஸ்தானம் பலப் படுகின்றது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். உடன் பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். வெற்றிகள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால், தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கேதுவின் ஆதிக்கத்தால், தொழில் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்துசேரும். பழைய வாகனத்தை பைசல் செய்து விட்டுப் புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆலயத் திருப்பணிகளிலும் கவனம் செலுத்துவீர்கள்.

8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த நேரத்தில் தனவரவு தாராளமாக வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரம் பற்றிய மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும் சூழ்நிலை அமையும். அஷ்டமத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலக் கோளாறுகள் உருவாகும். பிறருக்கு பணப்பொறுப்பு சொல்லியதன் மூலம் சிக்கல்கள் உருவாகலாம்.

வெற்றி பெற வைக்கும் வழிபாடு

பிரதோஷ நாளில் நந்தியம்பெருமானையும், சிவனையும், உமையவளையும் வழிபடுவதோடு, இல்லத்து பூஜை அறையில் நந்தீஸ்வரர் படம் வைத்து அதற்குரிய பதிகங்கள் பாடி வழிபட்டால் நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.

சனியின் வக்ர காலம்

12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி வக்ரமடைகின்றார்.

இதன் விளைவாக விரயங்கள் அதிகரிக்கும். வீண் பழிகள் வந்து சேரும். அசையா சொத்துக்கள் வாங்குவதில் தடை ஏற்படும். ஆரோக்கியப் பாதிப்புகள் உருவாகும். குடும்பப் பெரியவர்களையும், அனுபவஸ்தர்களையும் கலந்து ஆலோசித்து செய்வதன் மூலம் எதிலும் வெற்றி காண இயலும். தொழிலில் விழிப்புணர்ச்சி தேவை.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்

இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஏழரைச்சனியாக தொடங்குகின்றது. எனவே எப்பொழுதும் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. ஆதாயத்தைக் காட்டிலும் விரயம் கூடும். கணவன் - மனைவி ஒற்றுமை திருப்தி தரும். விலகிய சகோதரர்கள் விரும்பி வந்து சேருவர். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் கூடும். பிள்ளைகளின் வேலைவாய்ப்பு, திருமணம் போன்றவற்றில் செய்த ஏற்பாடு பலன் தரும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பாராத மாற்றம் வந்து சேரும். உத்தியோகத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவிக்கும் சூழ்நிலை உண்டு. பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைத்தால் பிரச்சினைகள் ஏற்படும்.


Next Story