மேஷம் - ஐப்பசி தமிழ் மாத ஜோதிடம்
ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2023 முதல் 16-11-2023 வரை
தன்னம்பிக்கையோடு செயல்படும் மேஷ ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது உங்கள் ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் மீது அவரது பார்வை பதிகின்றது. எனவே 'குரு மங்கள யோகம்' உருவாகின்றது. இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும்.
சனி வக்ர இயக்கம்!
ஐப்பசி 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி, வக்ர நிவர்த்தியாகின்றார். உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ர நிவர்த்தியாகி பலமடைவது யோகம்தான். எனவே இனி தொழில் வளம் சிறப்பாக இருக்கும். குறுக்கீடு சக்திகள் அகலும். கொடுக்கல்-வாங்கல்கள் சீராகும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். வருமானம் உயர வழிபிறக்கும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு மேலிடத்து ஆதரவும், தலைமைப் பதவிகளும் தானாகக் கிடைக்கலாம். புதிய நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. இருக்கும் நிறுவனமே உங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை.
குரு வக்ரம்!
மாதம் முழுவதும் குரு பகவான் உங்கள் ராசியிலேயே வக்ரம் பெற்று இருக்கின்றார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ர நிலையில் இருக்கும் பொழுது தந்தை வழியில் சில பிரச்சினைகள் தலைதூக்கும். பெற்றோர்களின் ஆதரவு குறையும். ஆரோக்கியத் தொல்லையும், வெளிநாடு செல்லும் முயற்சிகளில் தடைகளும் ஏற்படலாம். வியாழன் விரதமும், குரு வழிபாடும் வெற்றிக்கு வித்திடும்.
நீச்சம் பெறும் சுக்ரன்!
ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை இழந்து நீச்சம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தனாதிபதியாக விளங்கும் சுக்ரன் நீச்சம் பெறுவதால் பணப்புழக்கம் குறையும். புனிதப் பயணங்களால் விரயங்கள் ஏற்படும். கைகூடுவது போல் இருந்த கல்யாண முயற்சி கடைசி நேரத்தில் கைநழுவிச் செல்லலாம்.
விருச்சிக புதன்!
ஐப்பசி 14-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 6-க்கு அதிபதி 8-ல் வரும் பொழுது 'விபரீத ராஜயோகம்' செயல்படும். எனவே திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரமும் கிடைக்கும். மற்றவர்கள் பாராட்டும் அளவிற்கு நல்ல காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். இதுபோன்ற காலங்களில் பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்க ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வருவீர்கள்.
போட்டிகளுக்கு மத்தியில் பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் நாடி வரும். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ-மாணவிகளுக்கு கல்வி தொடர்பான பயணங்கள் உண்டு. பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். விரயங்கள் வந்தாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யம் நாட்கள்: அக்டோபர் 20, 21, 22, 25, 26, நவம்பர் 1, 2, 5, 6
மகிழ்ச்சி தரும் வண்ணம்: சிவப்பு.