மேஷம் - தமிழ் மாத ஜோதிடம்


மேஷம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 13 Feb 2023 10:10 AM IST (Updated: 13 Feb 2023 10:11 AM IST)
t-max-icont-min-icon

மாசி மாத ராசி பலன்கள் 13-02-2023 முதல் 14-03-2023 வரை

வேகத்தோடும், விவேகத்தோடும் செயல்படும் மேஷ ராசி நேயர்களே!

மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ஜென்மத்தில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். எனவே சர்ப்பக் கிரகங்களின் ஆதிக்கம் இருக்கிறது. விரய ஸ்தானத்தில் குரு இருப்பதால், விரயங்கள் அதிகரிக்கும். என்றாலும் அதற்கேற்ப வருமானமும் வந்துசேரும். குருவின் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிவதால் தாய் வழி ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மாற்று மருத்துவத்தின் மூலம் உடல்நலத்தை சீராக்கிக் கொண்டு சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வீட்டில் மங்கல ஓசை கேட்கும் சூழல் உருவாகும்.

உச்ச சுக்ரன் சஞ்சாரம்

மாசி 4-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு தன ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன் உச்சம் பெறும்பொழுது, பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். பழைய பாக்கிகளை கொடுத்து மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணையின் உத்தியோகம் சம்பந்தமான முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் உதிரி வருமானங்கள் வந்துசேரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாடு சம்பந்தமான முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

கும்ப - புதன் சஞ்சாரம்

மாசி 9-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு, சகோதர-சகாய ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மீன - புதன் சஞ்சாரம்

மாசி 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். 6-க்கு அதிபதியான புதன், 12-ம் இடத்தில் நீச்சம் பெறுவது யோகம்தான். மேலும் குருவோடு புதன் சேர்வதால், 'நீச்சபங்க ராஜயோகம்' ஏற்படுகிறது. அது மட்டுமின்றி 'விபரீத ராஜயோக' அடிப்படையிலும் பல நல்ல சம்பவங்கள் நடைபெறும். பொருளாதார வசதி பெருகும். வாகனம் வாங்கும் யோகம் முதல் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து யோகமும் வந்து சேரும். வரன்கள் முடிவாகி மகிழ்ச்சியை வழங்கும்.

மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

மாசி 29-ந் தேதி, உங்கள் ராசிக்கு சுக்ரன் வருகிறார். தனாதிபதியான சுக்ரன், உங்கள் ராசிக்கு வரும்போது தனவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். குடும்ப முன்னேற்றம் கூடும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பெண் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி, எடுத்த முயற்சி வெற்றிபெறும். பிரிந்து சென்ற உறவினர்கள் பிரியமுடன் வந்திணைவர்.

மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

மார்ச் 30-ந் தேதி மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இக்காலத்தில் மிக மிக கவனம் தேவை. குறிப்பாக ஆரோக்கியத்திலும், அதிகார வர்க்கத்தினருடன் பழகும் பொழுதும் பிரச்சினைகள் உருவாகலாம். மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்ப்பதால் திடீர் திடீரென மாற்றங்கள் ஏற்படலாம். பணிபுரியும் இடத்தில் வீண்பழி வந்துசேரலாம். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். சுய ஜாதக அடிப்படையில் வழிபாடுகளை மேற்கொண்டால் நல்லது நடக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

பிப்ரவரி: 16, 17, 21, 22, 28, மார்ச்: 1, 4, 5.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானம் கிடைக்கலாம். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும். மாதக் கடைசியில் விரயங்கள் கூடுதலாக இருக்கும். பணிபுரியும் பெண்களுக்கு, அலுவலகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. சகப் பணியாளர்களின் ஆதரவும் திருப்தி தரும்.


Next Story