சனிப்பெயர்ச்சி பலன்கள்- மேஷம்
27-12-2020 முதல் 20-12-2023 வரை
மகரத்தில் வருகிறது சனி மகத்தான பலன் கிடைக்கும் இனி! மேஷ ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான், தொழில் ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கப்போவது யோகம்தான். இதனால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கின்றார். அவரோடு இப்பொழுது சனியும் சேருவதால் 'நீச்ச பங்க ராஜயோகம்' ஏற்படுகின்றது. எனவே சனியால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்க, குருவின் அனுகூலமும் கைகொடுக்கும்.
தொழிலில் பணவரவு கூடும்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு வரும் சனி பகவானால் தொழில் வளர்ச்சி சிறப்பாக அமையும். கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுக்கும் ஆற்றல் சனி பகவானுக்கு உண்டு. எனவே தொழிலில் லாபத்தை அள்ளிக்கொடுப்பர். தொல்லை தந்த எதிரிகளின் பலம் குறையும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 4, 7, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. அதன்படி பூமி, சுகம், தாய், கல்வி, வியாபாரம், களத்திரம், பயணம், விரயம் ஆகியவற்றைக் குறிக்கும் 4-ம் இடத்தில், சனியின் பார்வை பதிவதால் ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படலாம். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. சனியின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் கல்யாண வாய்ப்புகள் கைகூடிவரும். ஏற்கனவே பேசி கைவிடப்பட்ட வரன்கள், மீண்டும் தேடிவரலாம். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். உறவினர்களோடு மனம் விட்டுப் பேசி சில பிரச்சினைகளுக்கு நல்ல முடிவெடுப்பீர்கள். சனியின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் பயணங் கள் அதிகரிக்கும். இடமாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும்பொழுது, பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் வந்துசேரும். சூரியன் 5-ம் இடத்திற்கு அதிபதியானவர். அவரது சாரத்தில் சனி சஞ்சரிக்கும்பொழுது, பொதுவாழ்வில் புகழ்கூடும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சந்திரன். எனவே இக்காலத்தில் இடம், வீடு வாங்கும் யோகம் உண்டு.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் போது, ராசிநாதன் காலில் சனி உலா வருவதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. இடையில் கும்ப ராசியிலும் சனி சஞ்சரிக்கின்றார். எனவே சுபவிரயங்கள் அதிகரிக்கும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழிலில் மேன்மை உண்டாகும். லாபமும் கிடைக்கும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும்பொழுது, விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். உறவினர்கள் பகை உருவாகலாம். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, ஜென்ம குருவாக வருவதால் இடமாற்றங்களும், ஊர்மாற்றங்களும் ஏற்படலாம்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சியாகும்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அதன்படி உங்கள் ராசிக்கு, ஜென்மத்தில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் வருவதால் குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும். கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை. வாழ்க்கைத் துணை வழியே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. 8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அந்த நேரத்தில் நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். சிக்கல்களில் இருந்தும், சிரமங்களில் இருந்தும் விடுபடுவீர்கள்.
வெற்றிக்குரிய வழிபாடு
சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி பகவானுக்குரிய 'கருநிறக் காகம் ஏறி..' என்ற சனி கவசப் பாடலைப் பாடி வழிபடுங்கள். அதோடு ஆதியந்தப் பிரபு படத்தை இல்லத்து பூஜை அறையில் வைத்து அருகம்புல் மாலையும், வெற்றிலை மாலையும் அணிவித்து வழிபட்டால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி பகவான் வக்ரமடைகின்றார்.
தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதி வக்ரமடைவது அவ்வளவு நல்லதல்ல. மிகுந்த கவனம் தேவை. எதிரிகள் பலம் கூடும். பிறருக்கு பொறுப்புகள் சொல்வதால் பிரச்சினைகள் உருவாகும். விரயம் உண்டு. தைரியமும், தன்னம்பிக்கையும், தெய்வ பலமும் உங்களுக்கு கைகொடுத்து உதவும். எதையும் யோசித்து முடிவெடுப்பது நல்லது.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
இந்த சனிப்பெயர்ச்சி, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பெயர்ச்சியாக அமையப்போகின்றது. பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். மங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். உடன் பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக்கொடுப்பர். பணிபுரியும் பெண்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். சனியின் வக்ர காலத்தில் உங்கள் ஆரோக்கியத்திலும், பெற்றோர்களின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கை கூடும்.