மகரம் - பிலவ ஆண்டு பலன்
14.4.2022 முதல் 13.4.2023 வரை
(உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 வரை) பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்
வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும்
மகர ராசி நேயர்களே!
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, உங்கள் ராசியிலேயே இருக்கிறார். எனவே எதிலும் ஈடுபாடு செலுத்த இயலாது. தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். குடும்பத்தில் பகை, உடன் இருப்பவர்களால் தொல்லை, உத்தியோகத்தில் பிரச்சினை, ஊர் மாற்றம், நிம்மதியின்மை, முன்னேற்றத்தில் பாதிப்புகள் போன்றவற்றை சந்திக்க நேரிடும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செய்வது நல்லது.
புத்தாண்டின் தொடக்க நிலை
புத்தாண்டு தொடங்கும் பொழுது ஜென்மத்தில் சனி வீற்றிருக்கிறார். முதல் சுற்றாக இருந்தாலும் சரி, மூன்றாவது சுற்றாக இருந்தாலும் சரி அதிக விரயங்கள் ஏற்படுவதோடு புது முயற்சிகளில் தடைகளையும், தாமதங்களையும் உருவாக்கும். எதிரிகளின் பலம் கூடும். திடீர் திடீரென வரும் தகவல்களால் மனக்குழப்பம் அதிகரிக்கும்.
2-ம் இடத்தில் செவ்வாய், சுக்ரன் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். இந்த சஞ்சாரம் சிறப்பான பலனைக் கொடுக்கும். விரயங்களை சுபவிரயமாக்க வழிகாட்டும். பழுதான வீட்டைப் பராமரிக்க இயலும். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். கல்யாணம் போன்ற சுபநிகழ்வுகள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, உயர்பதவிகள் வருவதில் தடை ஏற்பட்டாலும், சம்பள உயர்வோடு கூடிய நல்ல வேலை அமைய வாய்ப்புண்டு.
சுக ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு சேர்க்கை பெற்றிருக்கின்றன. 'புத ஆதித்ய யோகம்' உருவாவதால், கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதே நேரத்தில் சூரியனோடு ராகு இருப்பதால் அரசியல்வாதிகளால் பிரச்சினைகள் ஏற்படலாம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். திட்டமிட்ட காரியங்களில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். மாமன், மைத்துனர் வழியில் மனக்கசப்பு ஏற்படலாம். சேமிப்புக் கொஞ்சம் குறைந்தாலும் அதை ஈடுகட்டப் புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.
வருடத் தொடக்கத்தில் சனி பகவானும், குரு பகவானும் தங்களுக்குரிய சொந்த வீட்டில் பலம்பெற்று சஞ்சரிக்கிறார்கள். அதே நேரத்தில், சுக்ர மங்கள யோகம், சந்திர மங்கள யோகம், புத ஆதித்ய யோகம், சகடயோகம் போன்ற யோகங்கள் இருப்பதால் ஜென்மச் சனியாக இருந்தாலும் கூட பெரியளவில் பாதிப்புகளை உருவாக்ககாது. மேலும் கேது 10-ல் இருப்பதால் தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஆயினும் பங்குதாரர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.
நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டாலும், உடனுக்குடன் சரியாவிடும். ஜென்மச் சனி விலகும் வரை, கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். சனியின் பார்வை குரு மீது பதிவதால் குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். 3-ம் இடத்தில் குரு இருப்பதால் முயற்சிகள் சாதகமாக முடியும். உடன்பிறப்புகளில் ஒருசிலர் உங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் மற்ற சகோதரர்கள் உதவியாக இருப்பர். யாருடனும் பகை பாராட்ட வேண்டாம்.
குருவின் பார்வை பலன்
ஆண்டின் தொடக்கத்தில் மீனத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே களத்திர ஸ்தானம் புனிதமடைவதால் சுப காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். திருமணத் தடையால் கவலையில் இருந்தவர்களுக்கு, வரன்கள் வாசல் தேடி வந்து நிற்கும். பாக்கிய ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்க்கும் குருவால் பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். பகல் இரவாகப் பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வரலாம். சுய ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து, பயன் தரும் விதத்தில் 12-ம் இடம் இருக்கின்றதா என்பதைக் கண்டறிந்து, அதன்பிறகு முடிவெடுப்பதே நல்லது. பொதுவாக பார்க்கும் குருவைப் பலப்படுத்த, குரு பீடங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் எடுத்த முயற்சிகளில் இருந்த தடை ஓரளவேனும் விலகும்.
சனியின் வக்ரமும், பெயர்ச்சிக் காலமும்
25.5.2022 முதல் 9.10.2022 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதனாகவும், தனாதிபதியாகவும் விளங்கும் சனி வக்ரம் பெறும்பொழுது பணநெருக்கடி அதிகரிக்கும். குடும்பத்தில் சில பிரச்சினைகளைக் கண்டும் காணாமல் இருப்பது நல்லது. 29.3.2023-ல் கும்ப ராசிக்குச் சனி செல்கின்றார். அதன்பிறகு ஓரளவு உங்களுக்கு நற்பலன்கள் நடைபெறும். குறிப்பாக வழக்குகளில் வெற்றி கிட்டும். வருமானம் திருப்தி தரும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மீண்டும் பழைய வேலையிலேயே சேருவது பற்றி சிந்திப்பார்கள்.
வளர்ச்சி தரும் வழிபாடு
இந்தப் புத்தாண்டில் தடைகளும், தாமதங்களும் அகல சனிக்கிழமை தோறும் காக வாகனத்தான் சனி பகவானை கைகூப்பித் தொழுவது நல்லது.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டில் கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வாய்ப்புகள் வந்தாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் குறையும். வாழ்க்கைத் துணையை அடுத்தவர்களோடு ஒப்பிட்டுப் பேச வேண்டாம். குடும்பத்தில் மூத்தவர்களின் சொல் கேட்டு நடப்பதன் மூலமே அமைதிக்கான வழிபிறக்கும். ஜென்மச் சனி முடியும் வரை பொறுமையாக இருப்பது நல்லது.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
17.5.2022 முதல் 25.6.2022 வரை மீனத்தில் உள்ள செவ்வாயை, மகரத்தில் உள்ள சனி பார்க்கிறார். 9.10.2022 முதல் 28.11.2022 வரை மிதுனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். இவற்றின் பார்வையால் குடும்பத்துப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். கட்டிய வீடு அல்லது விற்ற சொத்துக்களால் பிரச்சினைகள் வரலாம். வேலைக்காக வெளிநாடு சென்றவர்கள், அங்கு வேலை கிடைக்காமல் ெசாந்த ஊர் திரும்பும் சூழ்நிலை உருவாகலாம். இதுபோன்ற காலங்களில் சனீஸ்வரன் வழிபாடும், அனுமன் வழிபாடும் சஞ்சலம் தீர்க்கும்.