மகரம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்
27-12-2020 முதல் 20-12-2023 வரை
ஜென்ம ராசியில் சனி! சிந்தித்து செயல்பட வேண்டும் இனி! மகர ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று உங்கள் ஜென்ம ராசிக்கு வருகின்றார். ஏழரைச்சனியில் விரயச்சனி முடிந்து ஜென்மச்சனி தொடங்கிவிட்டது. மகரம், சனிக்குச் சொந்த வீடு என்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் 'ஆயுள்காரகன்' என்று சொல்லப்படும் சனி பகவான், உங்களுக்கோ, உங்களைச் சார்ந்த குடும்பத்தினர் களுக்கோ உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகளை கொடுத்து நிவர்த்திசெய்வார். திடீர் திடீரென முடிவுகளை மாற்றிக்கொள்வீர்கள். பொருளாதாரப் பற்றாக்குறை அதி கரிக்கலாம்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருப்பதால் அவரோடு இப்பொழுது சனி சேர்வதால் 'நீச்சபங்க ராஜயோகம்' ஏற்படுகின்றது. மேலும் விரயாதிபதி குரு நீச்சம் பெறுவதும் யோகம்தான். எனவே விரயங்களைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு ஏற்படும். வீடு மாற்றங்கள், இடமாற்றங் கள், உத்தியோக மாற்றங்கள் வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.
ஜென்மச்சனியின் ஆதிக்கம்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசியிலேயே சனி சஞ்சரிக்கப் போகின்றார். இந்த ஜென்மச்சனி காலத்தில், திடீர், திடீரென மாற்றங்களும், மனக்குழப்பங்களும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் சிலருக்கு ஏமாற்றங்கள் வரலாம். பொல்லாதவர்களை விட்டு விலகி நல்லவர்களோடு இணைந்து செயல்பட்டால் உள்ளம் மகிழும் சம்பவங்களை நிறைய சந்திக்கலாம். இல்லையேல் அல்லல்பட்டு அதற்கு பரிகாரங்களை தேட வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் செயல்களில் குறை கண்டுபிடிப்பர். பணியில் தொய்வு ஏற்படும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பகை உருவாகலாம்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 3, 7, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. ராசிநாதன் மட்டுமல்லாமல் தனாதிபதியாகவும் சனி விளங்குவதால் அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைந்து அதற்குரிய காரகத்துவத்தைச் சிறப்பாகச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. சகோதரம், வெற்றி, பஞ்சாயத்துக்கள், களத்திரம், குடும்பம், வெளிநாட்டு முயற்சி, தொழில் வளம், பெற்றோர்களின் ஆரோக்கியம் ஆகியவற்றில் எல்லாம் மாற்றங்கள் வரலாம். 3-ம் இடத்தை சனி பார்ப்பதால் உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வழக்குகளில் எதிர்பாராத மாற்றம் உண்டு.
சனியின் பார்வை சப்தம ஸ்தானத்தில் பதிவதால், கல்யாண முயற்சிகளில் ஒருசில தடைகள் இருந்தாலும் கடைசி நேரத்தில் சிறப்பாக முடிந்துவிடும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து அதன் மூலம் உதிரி வருமானங்களும் வரலாம். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி வணிகம் மற்றும் பங்குச்சந்தையில் ஈடுபட்டிருப்பவர்கள், கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
சனியின் பார்வை பத்தாமிடத்தில் பதிவதால், பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பொறுப்புகளை மற்றவர் களிடம் ஒப்படைக்கக்கூடாது. சகப் பணியாளர்களால் சிறுசிறு தொல்லைகள் ஏற்படலாம். தொழில் நடத்து பவர்களுக்கு போதிய மூலதனம் இல்லாமல் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க விரும்புவர்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மிகுந்த கவனம் தேவைப்படும். வம்பு வழக்குகள் வாசல் தேடி வரும். அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்காது. அஷ்டமாதிபதியாக சூரியன் விளங்குவதால் எதையும் துணிந்து செய்ய இயலாது. தொடர்கதையாய் கடன்சுமை அதிகரிக்கும். அரசாங்க விரோதங்களும் உண்டு. அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு திடீரெனப் பொறுப்புகள் மாற்றப்படலாம். செய்தொழிலில் கவனம் செலுத்தா விட்டால் ஒவ்வொரு நாளும் இழப்புகளையே சந்திக்க நேரிடும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, கல்யாண முயற்சிகள் கை கூடும். களத்திர ஸ்தானாதிபதியாகச் சந்திர பகவான் விளங்குவதால் குடும்பத்தில் பிரிந்தவர்கள் வந்து சேர வாய்ப்பு உண்டு. வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் தத்தளித்தவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கைகூடி வரும். வாகனம் வாங்க நினைப் பவர்களுக்கு இக்காலம் உகந்த காலமாகும். வாகனத்தை மாற்ற விரும்புபவர்களுக்கு விலை உயர்ந்த நவநாகரிக வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். செல்வந்தர்களின் ஒத்துழைப்போடு திடீர் திருப்பங்களைக் காண்பீர்கள். செல்வநிலை உயரும். 'சேமிப்புக் கரைகிறதே' என்று கவலைப்பட்டவர்கள், இப்பொழுது மகிழ்ச்சி அடைவர். இடம், பூமியால் லாபம் உண்டு. என்றைக்கோ வாங்கிப்போட்ட இடம் இப்பொழுது பலமடங்கு விலை உயர்ந்து, அதன் விற்பனை மூலம் வரும் தொகையைக் கொண்டு தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். அரசு வேலைக்கு விண்ணப்பித்த வர்களுக்கு அனுகூலமான நேரம் இது. இக்காலத்தில் கும்பத்தில் சனியும் சஞ்சரிப்பதால் வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெறப்போகின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தன ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதிகார பலம் பெற்றவர்களின் ஆதரவோடு நல்ல சந்தர்ப்பங்கள் தேடிவரும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உத்தியோக உயர்வும், எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அர்த்தாஷ்டம குருவாக வருவதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக் கலாம்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அர்த்தாஷ்டம ராகுவாக வருவதால் ஆரோக்கியத் தொல்லைகள் உண்டு. பொறுமையுடன் செயல்பட வேண்டிய நேரமிது. 10-ல் கேது சஞ்சரிப்பதால் தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில், உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சகோதர சச்சரவுகள் அகலும். நிலுவையில் இருந்த வழக்குகள் சாதகமாக முடியும். கேது பலத்தால் தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொள்வதோடு இல்லத்து பூஜை அறையில் விஸ்வரூப ஆஞ்சநேயர் படம் வைத்து அனுமன் கவசம் பாடி வழிபட்டால் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி வக்ரமடைகிறார்.
இக்காலத்தில் கூடுதல் கவனம் உங்களுக்குத் தேவை. எவ்வளவு விழிப்புணர்ச்சியோடு இருந்தாலும் விரயங்களைச் சந்திக்கும் சூழ்நிலை உருவாகும். உறவினர்களுக்கு நீங்கள் நன்மை செய்தாலும் அது தீமையாகவே தெரியும். தொழில் பங்குதாரர்களால் தொல்லை உண்டு. மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சச்சரவு ஏற்படும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
இந்த சனிப்பெயர்ச்சி விரயச்சனியின் ஆதிக்கம் முடிந்து ஜென்மச் சனியின் ஆதிக்கமாக நடைபெறுகின்றது. ஆரோக்கியப் பாதிப்பு ஏற்படும். வீடு மாற்றங்கள் அல்லது ஊர் மாற்றங்கள் ஏற்படலாம். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அனுசரித்துச்செல்வது நல்லது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். தாய் மற்றும் உடன்பிறப்புகளையும் அரவணைத்துச் செல்வதே நல்லது. சுபவிரயங்களை அதிகரித்துக் கொள்ளுங்கள். பணிபுரியும் இடத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. வழிபாட்டின் மூலமே வளர்ச்சியில் உள்ள தளர்ச்சி அகலும்.