மிதுனம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
(மிருகசீர்ஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள் வரை)
(பெயரின் முதல் எழுத்துக்கள்: க, கா, கி, கு, ஞ, ச, கே, கோ உள்ளவர்களுக்கும்)
லாப ஸ்தானத்தில் குருபகவான்! நல்லவிதம் இனி தொழில் அமையும்!
எவரிடமும் எளிதாகப் பழகும் இனிய சுபாவம் பெற்ற மிதுன ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் 22.4.2023 முதல் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். எனவே தொழில் வளர்ச்சி திருப்தி தரும். உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்களைக் காணப் போகிறீர்கள். உதிரி வருமானங்களும், வாகன யோகமும் உண்டு. ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
குரு இருக்கும் இடத்தின் பலன்!
மகத்துவம் வாய்ந்த குரு பகவான் நவக்கிரகங்களில் நல்ல விதமான பார்வையைக் கொடுப்பார் என்று போற்றப்படுவார். அவர் உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான குரு, லாப ஸ்தானத்திற்கு இப்போது வரும் இந்த நேரம் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும்.
மன்னவன் பதினொன்றில்
வந்துவிட்டால் செல்வம்வரும்!
எண்ணியது நிறைவேறும்!
இனியதொரு வாழ்வமையும்!
அந்நியர்கள் உதவியுடன்
அதிசயிக்கும் தொழில்அமையும்!
மண்ணுலகில் கடல்தாண்டும்
வாய்ப்புகளும் உருவாகும்!
என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
அந்த அடிப்படையில் லாப ஸ்தானத்திற்கு குரு வரும்பொழுது பணவரவு திருப்தி தரும். மதிப்பும், மரியாதையும் உயரும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்து இழந்த செல்வத்தை மீண்டும் வரவழைத்துக் கொள்வீர்கள். பிள்ளை களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பெண் குழந்தை களின் திருமணங்கள் சிறப்பாக நடைபெற வழிபிறக்கும். பொதுவாழ்வில் புதிய திருப்பங்கள் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் காலம் இது என்பதால் சுறு சுறுப்பாக செயல்பட்டு முன்னேறுவீர்கள்.
வெற்றிகளைக் குவிக்கும் வியாழனின் பார்வை!
'குரு பார்த்தால் கோடி தோஷ நிவர்த்தி' என்பது பழமொழி. அந்த அடிப்படையில் இப்பொழுது பெயர்ச்சியாகி இருக்கும் குரு பகவான் 3, 5, 7 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். எனவே முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க வாய்ப்புகள் வந்து சேரும். திசாபுத்தி பலம் பெற்றிருப்பவர்கள் சிறப்பான பலன்களைக் காண்பர். 3-ம் இடம் தைரிய ஸ்தானம் என்பதால் துணிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். சரிந்து கிடந்த பொருளாதாரம் சகஜ நிலைக்கு வரும்.
குருவின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுகின்றது. எனவே பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய யோகங்கள் அனைத்தும் வரப்போகின்றது. சண்டை போட்ட உறவினர்கள் சமாதானமடைவர். நீடித்த நோய் அகலும். தாய்வழி அனுகூலமும், ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் பலன்தரும் நேரமிது.
குருவின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் களத்திர ஸ்தானம் புனிதமடைகின்றது. இல்லற வாழ்வில் ஏற்பட்ட இடர்பாடுகள் அகலும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் விழாக்களை நடத்திப் பார்க்கும் வாய்ப்பு உருவாகும். வேலை காரணமாக பிரிந்திருந்த தம்பதியர் இனி ஒரே ஊரில் பணிபுரிய சந்தர்ப்பம் அமையும்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்!
அசுவதி நட்சத்திரக் காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:
நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். லாப ஸ்தானத்தில் அசுவதி நட்சத்திரக்காலில் கேது சாரத்தில் குரு சஞ்சரிப்பதால் தொழிலில் லாபம் கிடைக்கும். படித்து முடித்து வேலை கிடைக்காமல் இருக்கும் பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு லாபத்தை குவிக்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் நல்ல வேலைவாய்ப்பு அமையும்.
பரணி நட்சத்திரக்காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:
குரு பகவான் பரணி நட்சத்திரக்காலில் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது மறக்க முடியாத சம்பவங்கள் நிறைய நடைபெறும். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். எனவே பிள்ளை களின் வழியே சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். கல்யாணம், காதுகுத்து, கட்டிடத் திறப்புவிழா போன்றவை கைகூடும் நேரமிது. பூர்வீக சொத்துக்களில் இதுவரை இருந்த பிரச்சினைகள் தீர்விற்கு வரும். பழைய வாகனங்களை கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உல்லாசப் பயணங்களால் உற்சாகம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர்.
கார்த்திகை நட்சத்திரக் காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:
உங்கள் ராசிக்கு 3-ம் இடமான சகாய ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சூரியன். அவரது சாரத்தில் கார்த்திகை நட்சத்திரக் காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது சகாயங்கள் அதிகம் கிடைக்கும். வரவு, செலவுகளில் சரளமான நிலை உருவாகி மகிழ்ச்சி தரும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். என்றைக்கோ வாங்கிப் போட்ட சொத்துக்கள் இப்பொழுது பலமடங்கு விலை உயர்ந்து லாபத்தை தரும். வியாபாரத்தில் புதிய துறைகளைத் தேர்ந்தெடுக்கும் தேடல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி களின் பாராட்டும், தடைப்பட்டு வந்த பதவி உயர்வும் கிடைக்கும் நேரம் இது.
ராகு-கேது பெயர்ச்சி!
மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் காலத்தில், 8.10.2023 அன்று மீன ராசிக்கு ராகு செல்கின்றார். கன்னி ராசிக்கு கேது செல்கின்றார். இதுவரை குருவுடன் ராகு சேர்ந்திருந்தது. இப்பொழுது ராகு விலகி விட்டதால் குரு கூடுதல் பலம் பெறுகின்றார். எனவே அவரது பார்வைக்கு பலன் அதிகம் கிடைக்கும். அதே நேரத்தில் 10-ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் முத்தான தொழில்கள் வாய்க்கலாம். முன்னேற்றம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களுக்கு நெருக்கமாவர். 4-ல் கேது சஞ்சரிப்பதால் கட்டிய வீட்டைக் கொடுத்து விட்டோமே என்று கவலைப்பட்டவர் களுக்கு இப்பொழுது புதிய வீடு அமையும். ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை செலுத்துவது நல்லது.
குருவின் வக்ர காலம்! (12.9.2023 முதல் 2012.2023 வரை)
இக்காலத்தில் குரு பகவான் அசுவதி மற்றும் பரணி நட்சத்திரக் காலில் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு கேந்திராதிபத்ய தோஷம் பெற்றவர் குரு பகவான். எனவே அவர் வக்ரம் பெறும் பொழுது நற்பலன்களை வழங்குவார். இக்காலத்தில் தடையாகி நின்ற சுபகாரியங்கள் படிப்படியாக நடைபெறும். ஆதாயம் தரும் தகவல்கள் அதிகம் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். பயணங்களால் பலன் உண்டு. சர்ம நோய்களால் அவதிப்பட்டவர்களுக்கு நல்ல மருத்துவ ஆலோசனை மூலம் பழைய உடல் வாகைப் பெற முடியும். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், இலாகா மாற்றம் கிடைக்கும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
மிதுன ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். உறவினர்களின் உதவியும் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்கும். மண மாலைக்காக காத்திருப்பவர்களுக்கு மாலையும், உத்தியோகத்திற்காக காத்திருப்பவர்களுக்கு வேலையும் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு கணவன்-மனைவி உறவில் ஒற்றுமை பலப்படும். குடும்ப நிர்வாகத்தை திறம்படச் செய்து புகுந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பீர்கள். அசையாச் சொத்துக்கள் உங்கள் பெயரில் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
இல்லத்துப் பூஜை அறையில் லட்சுமி படம் வைத்து வழிபடுவது நல்லது. வெள்ளிக்கிழமை தோறும் அஷ்ட லட்சுமி கவசம் பாடி, ஜோடி தீபமேற்றி வழிபட்டு வாருங்கள். சகல யோகங்களும் வந்து சேரும்.