மிதுனம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்


மிதுனம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
தினத்தந்தி 17 May 2022 1:12 PM IST (Updated: 17 May 2022 1:14 PM IST)
t-max-icont-min-icon

(மிருகசீர்ஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள் வரை)

பெயரின் முதல் எழுத்துக்கள்: க, கா, கி, கு, ஞ, ச, கே, கோ உள்ளவர்களுக்கும்

வருகிறது ராகு பதினொன்றில்; வருமானம் இனிமேல் திருப்தி தரும்

மிதுன ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், மார்ச் 21-ந் தேதி முதல் 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அதே நேரம் கேது பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வருகிறார். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ராகுவும், கேதுவும் அந்த இடத்தில் சஞ்சரித்து அங்குள்ள நட்சத்திர பாதசாரங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார்கள்.

வரவைப் பெருக்கும் ராகு, சுபச்செய்தியை வழங்கும் கேது

11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு வரும் ராகு, பணத்தேவையை உடனுக்குடன் பூர்த்தி செய்வார். வியாபாரத்தில் இதுவரை ஏற்பட்ட சரிவை ஈடுகட்டுவீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிக்கு கடனுதவி கிடைக்கும். படித்து முடித்தவருக்கு வேலைவாய்ப்பு உண்டு. பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் பிள்ளைகளின் கல்யாண வாய்ப்பு கைகூடும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பூர்வீக சொத்துக்களை விற்று விட்டுப் புதிய சொத்துக்களை வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். இதுவரை எதிர்நீச்சல் போட்ட நீங்கள், இனி முன்னேற்றம் காண்பீர்கள்.

சூரிய சாரத்தில் ராகு சஞ்சாரம்(21.3.2022 முதல் 22.5.2022 வரை)

கார்த்திகை நட்சத்திரக் காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். வீடு தேடி நல்ல தகவல்கள் வரலாம். ஆரோக்கியத் தொல்லைகள் அகலும். உடன்பிறப்புகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். அண்ணன், தம்பிகளின் ஆதரவோடு எண்ணிய காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். தொழில் வளர்ச்சிக்காக செய்த புது முயற்சிகள் வெற்றி தரும்.

சுக்ரன் சாரத்தில் ராகு சஞ்சாரம்(23.5.2022 முதல் 28.1.2023 வரை)

பரணி நட்சத்திரக் காலில் சுக்ரனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகள் வழியில் சுபச்செய்திகள் வந்து சேரும். இல்லத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் கேட்கும். தங்கு தடைகள் தானாக விலகும். பழைய நகைகளைக் கொடுத்துவிட்டுப் புதிய நகைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப ஒற்றுமை பலப்படும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், இடமாற்றமும் வரலாம். நீ்ண்ட நாட்களுக்கு முன்பு செய்த உத்தியோக முயற்சி இப்பொழுது கைகூடும்.

கேதுவின் சாரத்தில் ராகு சஞ்சாரம்(29.1.2023 முதல் 7.10.2023 வரை)

அசுவினி நட்சத்திரக் காலில் கேதுவின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய திருப்பங்கள் ஏற்படும். அருளாளர்களின் ஆலோசனையால் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வெளிநாட்டுத் தொடர்பால் லாபம் உண்டு. பிள்ளைகள் வழியில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை ஏற்றுக்கொண்டு சரிசெய்து விடுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சுமுகநிலை ஏற்படும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை வாங்கும் சந்தர்ப்பம் கைகூடிவரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளில் சமரச முயற்சி வெற்றிபெறும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

குரு சாரத்தில் கேது சஞ்சாரம்(21.3.2022 முதல் 25.9.2022 வரை)

விசாக நட்சத்திரக் காலில் குருவின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொகை வரவும் திருப்தி தரும். ெகாடுத்த கடன்கள் வசூலாகும். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதி குரு என்பதால், நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரலாம். 'குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கிறோமே, நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வருமா?' என்று யோசித்தவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். நிரந்தர வருமானம் கிடைப்பதற்கான வழிபிறக்கும். நீண்ட நாள் நோய் அகலும்.

ராகு சாரத்தில் கேது சஞ்சாரம்(26.9.2022 முதல் 3.6.2023 வரை)

சுவாதி நட்சத்திரக் காலில் ராகுவின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புகழ்மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் வளம் காண்பீர்கள். ஆரோக்கியம் சீராகும். முன்னோர்கள் கட்டி சிதலமடைந்த கோவில்களை மீண்டும் பராமரிக்கும் முயற்சி கைகூடும். பற்றாக்குறை அகல எடுத்த புது முயற்சி வெற்றிபெறும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்து விற்பனையால் தன லாபம் உண்டு. பொதுவாக இக்காலத்தில் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நிறைவேறும்.

செவ்வாய் சாரத்தில் கேது சஞ்சாரம்(4.6.2023 முதல் 7.10.2023 வரை)

சித்திரை நட்சத்திரக் காலில் செவ்வாயின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, உத்தியோக வாய்ப்பு கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றும் வைத்து பேசியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். வாழ்க்கைத் தேவை பூர்த்தியாகும். வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். சொத்து விற்பனையால் லாபம் உண்டு.

குருப்பெயர்ச்சிக் காலம்

ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில் இரண்டு முறை குருப்பெயர்ச்சி நடைபெறுகிறது. ஏப்ரல் 13-ந் தேதி மீன ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார். அவர் உங்கள் ராசிக்கு 10-ல் வருவதால் பதவி மாற்றம் உருவாகும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மாற்றப்படலாம். செய்யும் தொழில்களில், ஏதேனும் ஒரு தொழிலை கொடுக்கும் சூழ்நிலை உருவாகலாம். 22.4.2023 அன்று மேஷத்திற்கு குரு பெயர்ச்சியாகிறார். அதன் பார்வை பலத்தால், சகோதர ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகளின் கல்வி மற்றும் கல்யாணம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

சனிப்பெயர்ச்சிக் காலம்

16.3.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். இக்காலம் ஒரு பொற்காலமாகும். இனி அஷ்டமத்துச் சனி விலகிவிட்டது. எனவே, குறுக்கீடு சக்திகள் அகலும். கொள்கைப்பிடிப்போடு நடக்க இயலும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தலைமைப் பதவி கூடத் தானாக வந்து சேரலாம். கவுரவம், அந்தஸ்து உயரும்.

பெண்களுக்கான பலன்கள்

இந்த ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக உங்கள் செல்வநிலை உயரும். புதிய பாதை புலப்படும். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு அகலும். வாழ்க்கைத் துணையின் உடல்நலம் சீராகும். பிள்ளைகளுக்கான கல்யாண முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு வரும். நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது நல்லது. ஏகாதசி விரதமும், விஷ்ணு வழிபாடும் இனிய பலன் தரும்.


Next Story