சிம்மம் - தமிழ் மாத ஜோதிடம்


சிம்மம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 14 March 2023 6:45 PM GMT (Updated: 14 March 2023 6:45 PM GMT)

பங்குனி மாத ராசி பலன்கள் 15-03-2023 முதல் 13-04-2023 வரை

நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிக்கும் சிம்ம ராசி நேயர்களே!

பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். எனவே உடல் நலத்தில் கவனம் தேவை. காரிய தாமதங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். கவலைக்குரிய தகவல்களும் வரலாம். சனியும், சூரியனைப் பார்ப்பதால், தொழில் மற்றும் உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் உருவாகலாம். நிலைமை சீராக முறையான வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. அஷ்டமத்தில் சூரியனோடு புதனும், குருவும் இணைந்திருப்பதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும் என்றாலும் மனக்குழப்பம் அதிகரிக்கும்.

இம்மாதம் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கிறார். இந்த நிகழ்வு பங்குனி 14-ந் தேதி வரை இருப்ப தால் மாதத் தொடக்கத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. மனதில் உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கையிருப்புகள் குறையலாம். கடமையில் தொய்வு ஏற்படும். 'நிலைமை இன்னும் சீராகவில்லையே, எப்பொழுதுதான் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்குமோ?, ஸ்தம்பித்து நின்ற தொழில் சிறப்பாக நடைபெறுமா?' என்றெல்லாம் சிந்திக்கத் தோன்றும். வியாபாரம் மந்த நிலையில் இருந்தாலும் ஓரளவு லாபம் கிடைக்கும். பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.

மேஷ - புதன்

பங்குனி 15-ந் தேதி உங்கள் ராசிக்கு தன, லாபாதிபதியான புதன், 9-ம் இடத்திற்கு செல்கிறார். இக்காலம் உங்களுக்கு ஒரு ஏற்றமான காலமாகும். வருமானம் உயரும். வாழ்க்கைப் பாதை சீராகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பூமி வாங்குவது முதல் சாமி கும்பிடும் ஆன்மிகப் பயணம் வரை சந்தோஷமான தகவல் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட முன்வருவீர்கள்.

ரிஷப - சுக்ரன்

பங்குனி 24-ந் தேதி உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 10-ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கே செல்கிறார். எனவே தொழில் முன்னேற்றம் உண்டு. வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் யோகம் உண்டு. சகோதர வர்க்கத்தினர் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வழக்குகள் சாதகமாக முடியும். வருமானப் பெருக்கத்திற்கும் வழி பிறக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முன்னேற்றப் பாதையில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும். வியாபாரம், தொழில் நடத்துபவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வருமானம் திருப்தி தரும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ-மாணவிகளுக்கு படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு சுபவிரயங்கள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. பணிபுரியும் இடத்தில் சகப் பணியாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மார்ச்: 24, 25, 29, 30, ஏப்ரல்: 6, 7, 8, 10, 11.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.


Next Story