சிம்மம் - ஆவணி தமிழ் மாத ஜோதிடம்


சிம்மம் - ஆவணி தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆவணி மாத ராசி பலன்கள் 18-08-2023 முதல் 17-09-2023 வரை

வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட சிம்ம ராசி நேயர்களே!

ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு சந்திரன், செவ்வாய், புதன், சுக்ரன் ஆகிய நான்கு கிரகங்களும் இணைந்து கூட்டுக் கிரக யோகத்தை உருவாக்குகிறார்கள். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம். எனவே, திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும். தன்னம்பிக்கை துளிர்விடும். தனித்து இயங்குபவர்கள் பொருளாதார முன்னேற்றம் காண்பர். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.

கடக - சுக்ரன்

ஆவணி 1-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். தொழில் ஸ்தானாதிபதியான சுக்ரன், விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது தொழில் மாற்றம் மற்றும் உத்தியோக மாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகம். வாடகைக் கட்டிடத்தில் இயங்கிய தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு, புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ள முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட மாறுதல்கள் கிடைக்கும். ஒருசிலருக்கு ஊதிய உயர்வின் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து, வேறு இடத்தில் வேலை பார்க்கும் சூழ்நிலை ஏற்படும்.

கன்னி - செவ்வாய்

ஆவணி 2-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், தன ஸ்தானத்திற்கு வரும் போது பொருளாதாரம் விருத்தியாகும். இடம் வாங்குதல், வீடு வாங்குதல், மனை கட்டிக் குடியேறும் அமைப்பு போன்றவற்றிற்கு அடித்தளம் அமையும் நேரம் இது. தன ஸ்தானத்தில் செவ்வாய் உலாவரும் போது, பூமி விற்பனையாலும், பங்குச் சந்தையாலும் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சகோதர வழி சச்சரவுகள் மாறி பாகப்பிரிவினைக்கு வழிபிறக்கும்.

மகர - சனி

சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, மகர ராசிக்கு வக்ர இயக்கத்தில் செல்கிறார். வாக்கிய கணித ரீதியாக வரும் இந்த மாற்றம் உங்களுக்கு நன்மைகளைக் கொடுக்கும். கண்டகச் சனியில் இருந்து விடுபடுவதால் கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் துரிதமாக நடைபெறும். இடம், பூமி சேர்க்கை, இல்லத்தில் சுப காரியங்கள், தொழில் முன்னேற்றங்கள், உத்தியோகத்தில் சம்பள உயர்வு போன்றவை திருப்திகரமாக அமையும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளும், செல்வாக்கும் அதிகரிக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு தடைப்பட்ட காரியங்களை தகுந்தவிதத்தில் செய்து முடிப்பீர்கள்.

புதன் வக்ர நிவர்த்தி

சிம்மத்தில் சஞ்சரித்து வரும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்குத் தன - லாபாதிபதியான புதன் வக்ர நிவர்த்தியாவது யோகம்தான். பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைவீர்கள். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். வியாபாரப் போட்டிஅகலும். தொழில் வெற்றிநடைபோடும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் தானாக வந்துசேரும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொன்னான நேரம் இது. தொழில் செய்பவர்கள் விரும்பியபடியே லாபத்தை அடைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகள் மகத்தான பலனைப் பெறுவர். பெண்களுக்கு கொடுக்கல்- வாங்கல் சரளமாகும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 20, 21, 23, 24, செப்டம்பர்: 4, 5, 8, 9, 16, 17.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.


Next Story