துலாம் - பிலவ ஆண்டு பலன்


துலாம் - பிலவ ஆண்டு பலன்
தினத்தந்தி 23 May 2022 9:31 PM IST (Updated: 23 May 2022 9:33 PM IST)
t-max-icont-min-icon

14.4.2022 முதல் 13.4.2023 வரை

(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை) பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்

யோசித்து செயல்பட வேண்டிய நேரம்

துலாம் ராசி நேயர்களே!

இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் சஞ்சரிக்கின்றார்கள். எனவே முழுமையாக சர்ப்பக் கிரக ஆதிக்கம் இருக்கிறது. எனவே வாழ்வில் ஏற்றமும், இறக்கமும் மாறி மாறி வந்துசேரும். மனக்குழப்பம் அதிகரிக்கும். குருவின் வக்ர காலத்தில் நற்பலன்கள் அதிகமாகக் கிடைக்கும்.

புத்தாண்டின் தொடக்க நிலை

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், பஞ்சம ஸ்தானத்தில் சப்தமாதிபதி செவ்வாயோடு இணைந்திருக்கிறார். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய பொறுப்புகள் வந்துசேரும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். பயணங்கள் பலன் தரும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பழைய சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் பலமடங்கு லாபம் கிடைக்கலாம். ஆபரண சேர்க்கை உண்டு. ஆற்றல்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து சில நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர்.

ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால் கால சர்ப்ப தோஷம் உள்ளது. எனவே இனம்புரியாத கவலை மேலோங்கும். எடுத்த காரியங்களை முடிப்பதில் தடைகள் அதிகரிக்கும். இருப்பினும் கடைசி நேரத்தில் காரியங்கள் கைகூடிவிடும். அதிகபட்சமான உழைப்பு உண்டு. ஆனால் அதற்கு ஏற்ற விதத்தில் ஆதாயம் கிடைக்காது. உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைப்பது போல் தோன்றி, கைநழுவிச் செல்லும். இதுபோன்ற காலங்களில் ராகு -கேதுகளுக்கு முறையான பரிகாரம் செய்தால், அதன்பிறகு நன்மைகள் படிப்படியாக நடைபெறும்.

ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான், அா்த்தாஷ்டமச் சனியாக செயல்படுகிறார். இதற்கு அஷ்டமத்துச் சனியில் பாதிப் பங்கு வலிமை உண்டு. சுகக்கேடு கள் வரலாம். சொல்லைச் செயலாக்க முடியாமல் தத்தளிப்பீர்கள். நண்பர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். உடல்நலனில் சிறிய அச்சுறுத்தல் ஏற்பட்டாலும், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. பிறரை சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும்.

6-ம் இடத்தில் குரு சஞ்சரிக்கின்றார். 'ஆறில் குரு, ஊரில் பகை' என்பார்கள். எனவே எந்த நேரத்திலும் எதிர்ப்புகள் வரலாம். அது இல்லமாகவும் இருக்கலாம், பணிபுரியும் இடமாகவும் இருக்கலாம். குரு பார்வை இரண்டில் பதிவதால், காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். புதிய வழக்குகளை சந்திப்பீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் மீது வீண்பழி விழலாம்.

சந்திரனை செவ்வாய் பார்ப்பதால் 'சந்திர மங்கள யோகம்', சுக்ரனோடு செவ்வாய் இருப்பதால் 'சுக்ர மங்கள யோகம்', சூரியனோடு புதன் இணைந்திருப்பதால் 'புத ஆதித்ய யோகம்' செயல்படுகிறது. அதோடு 'சகட யோக'மும் இருக்கிறது. இத்தனை விதமான யோகங்களும் இருக்கும் புத்தாண்டில், மகிழ்ச்சி அதிகரிக்க, மனக் கவலை மாற வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. திசாபுத்திக்கேற்ற தெய்வங்களை தேர்ந்தெடுத்து வழிபட்டால் நன்மைகள் நாளும் வந்துசேரும்.

குருவின் பார்வை பலன்

ஆண்டின் தொடக்கத்தில் மீனத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே அந்த இடங்களெல்லாம் புனிதமடைகிறது. குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். கொடுக்கல்- வாங்கல் சீராகும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் துரிதமாக நடைபெறும். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். வள்ளல்களின் ஒத்துழைப்பும், வங்கிகளின் ஒத்துழைப்பும் கிடைத்து வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முன்வருவீர்கள். தொழில் முயற்சியில் இருந்த தடைகள் அகலும். உத்தியோகம் சம்பந்தமாக நேர்முகத் தேர்விற்குச் சென்று வந்திருந்தால், அந்த வேலை கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு, புதிய ஒப்பந்தங்கள் வரலாம். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வந்து சேருவர். 12-ம் இடத்தை குரு பார்ப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் போன்றவை ஏற்படலாம். சுபவிரயங்கள் அதிகரிக்கும். வாழ்க்கைப் பாதையில் இருந்த தடைகற்கள் அகலும்.

சனியின் வக்ரமும், பெயர்ச்சிக் காலமும்

25.5.2022 முதல் 9.10.2022 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகிறார். சனியின் வக்ர காலத்தில் ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் உண்டு. வாகனப் பழுதுகளால் வாட்டம் ஏற்படும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. பயணத்தால் விரயம் உண்டு. 29.3.2023-ல் நடைபெறும் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு, கும்பச் சனி உங்களுக்கு நன்மைகளைச் செய்யும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை உயரும். தற்காலிகப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரப் பணிக்கு மாறுவர். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகள் நனவாகும். பாகப்பிரிவினைகள் கூட சுமுகமாக முடியலாம்.

வளர்ச்சி தரும் வழிபாடு

வருடம் முழுவதும் நன்மை கிடைக்க செவ்வாய்க்கிழமை தோறும் வராகி அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

பெண்களுக்கான பலன்கள்

இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே சர்ப்பக் கிரக ஆதிக்கம் இருக்கிறது. எனவே இன்பமும், துன்பமும் கலந்தே வாழ்க்கை பயணிக்கும். உறவினர்கள், சுற்றத்தாரிடம் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். கணவன் - மனைவி, ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலமே வாழ்வில் அமைதி காண இயலும். விரயங்கள் கூடும். வருமானப் பற்றாக்குறை ஏற்படும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். உத்தியோக மாற்ற சிந்தனை மேலோங்கும்.



கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

17.5.2022 முதல் 25.6.2022 வரை மீனத்தில் உள்ள செவ்வாயை, மகரத்தில் உள்ள சனி பார்க்கிறார். 9.10.2022 முதல் 28.11.2022 வரை மிதுனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார்.இவற்றின் பார்வை காலத்தில் மனக்கசப்பு தரும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். மங்கல ஓசை இல்லத்தில் கேட்கும் வாய்ப்பும் தாமதப்படலாம். குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்பட வேண்டும் இல்லாவிட்டால் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். சொத்துக்களை விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.


Next Story