துலாம் - ஆடி தமிழ் மாத ஜோதிடம்
ஆடி மாத ராசி பலன்கள் 17-07-2023 முதல் 17-08-2023 வரை
எவரிடத்திலும் எளிதாகப் பழகும் துலாம் ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், தனாதிபதி செவ்வாயோடு இணைந்து லாப ஸ்தானத்தில் வீற்றிருக்கிறார். குரு பார்வையும் உங்கள் ராசியில் பதிகின்றது. எனவே பொருளாதாரத்தில் மேம்பாடு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தேடி வந்த வரனால் திருமண முயற்சி கைகூடும். செய்தொழிலில் லாபம் திருப்திகரமாக இருக்கும். மனக்குழப்பம் அகன்று மகிழ்ச்சியோடு செயல்படுவீர்கள்.
மேஷ - குரு சஞ்சாரம்
நவக்கிரகத்தில் சுப கிரகமான குரு பகவான், இப்பொழுது மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், உங்கள் ராசியைப் பார்ப்பதோடு, சகோதர ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானத்தையும் பார்க்கிறார். கேதுவின் பார்வையும், சகோதர ஸ்தானத்தில் பதிகிறது. எனவே உடன்பிறப்புகளோடு ஒரு ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்வீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகவான் பகை கிரகமாக இருந்தாலும் குருவின் பார்வைக்கு பலன் உண்டு. எனவே அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். காலாவதியாகிப் போன கடன்கள் வசூலாகும். வெளிநாட்டு முயற்சியில் அனுகூலம் உண்டு. வாகனங்கள் வாங்கி மகிழ வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும்.
குருவின் பார்வை பலத்தால் சகோதர ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானம் புனிதமடைவதால் உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். தொழிலுக்கான மூலதனங்களை நீங்கள் போட்டு, அதை நிர்வகிக்கும் பொறுப்பை சகோதர வர்க்கத்தினர் கையில்ஒப்படைப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். பூமிப் பிரச்சினை சுமுகமாக முடியும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா? என்று சிந்திப்பீர்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் உங்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய முன்வருவர்.
சிம்ம - புதன்
ஆடி 7-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்திற்கும், விரய ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் புதன். விரயாதிபதி லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது, விரயத்திற்கேற்ற லாபம் வந்து கொண்டேயிருக்கும்.
எந்தக் காரியத்தைச் செய்ய நினைத்தாலும் பணத்தை வைத்துக்கொண்டு செய்யவேண்டியதில்லை. காரியத்தை தொடங்கிவிட்டால் பணப்புழக்கம் தானாகவே வந்து சேரும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். ஒரு சிலருக்கு பழைய தொழிலைக் கொடுத்து விட்டு புதிய தொழில் தொடங்கலாமா? என்ற சிந்தனை மேலோங்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நிதி உதவி கிடைத்து தொழிலை விரிவு செய்யும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் பக்கபலமாக இருப்பர். கலைஞர்களுக்கு கவுரவம், புகழ் கூடும். மாணவ - மாணவிகள், போட்டிக்கு மத்தியில் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். பெண்களுக்கு, தங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. அருகில் இருப்பவர்களின் ஆதரவு உண்டு. இல்லத்தில் சுபகாரியங்கள் இனிதே நடைபெறும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 17, 21, 22, 27, 29, ஆகஸ்டு: 2, 3, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.