துலாம் - ஐப்பசி தமிழ் மாத ஜோதிடம்
ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2023 முதல் 16-11-2023 வரை
உதவும் குணத்தால் உள்ளத்தில் இடம் பிடித்த துலாம் ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத்தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். மேஷத்தில் உள்ள குரு உங்கள் ராசியையும், ராசிநாதன் சுக்ரனையும் பார்க்கின்றார். எனவே இந்த மாதம் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும் மாதமாக அமையப் போகின்றது. எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். தங்கு தடைகள் தானாக விலகும்.
சனி வக்ர நிவர்த்தி!
ஐப்பசி மாதம் 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகின்றார். உங்கள் ராசிக்கு இப்பொழுது அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. வக்ர நிவர்த்தியான பின்பு அதன் பலம் கூடுகின்றது. சுபச்செலவுகள் அதிகரிக்கும். துணிந்து முடிவெடுத்து நல்ல மாற்றங்களை வரவழைத்துக் கொள்வீர்கள். ஆன்மிகப்பற்று அதிகரிக்கும். வெளிநாடு அல்லது வெளியூர் செல்லும் வாய்ப்பு உருவாகும். உடல் நலனுக்காக ஒரு தொகையைச் செலவிடும் வாய்ப்பு உண்டு. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். அதனால் மனக்கலக்கம் உருவாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு வேறு வேலைக்கு மாறும் ஆர்வம் உருவாகும்.
குரு வக்ரம்!
மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியிலேயே வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகை கிரகமாகும். எனவே அவர் வக்ரம் பெறுவது நன்மை தான். எதிரிகள் பலமிழக்கும் இந்த நேரத்தில் சில நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். உத்தியோகத்தில் எதிர்பாராத விதத்தில் உயர்வுகளும், ஊதிய உயர்வும் கிடைக்கலாம். நல்ல சந்தர்ப்பங்கள் நாடி வரும் நேரமிது.
நீச்சம் பெறும் சுக்ரன்!
ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை இழந்து நீச்சம் பெறுகின்றார். உங்கள் ராசிநாதன் சுக்ரன் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. அதே நேரத்தில் சுக்ரன் அஷ்டமாதிபதியாகவும் விளங்குவதால் இழப்புகளை ஈடுசெய்ய நல்ல வாய்ப்புகளும் வந்து சேரும். மாற்று மருத்துவத்தின் மூலம் உடல்நலம் சீராகும். என்றைக்கோ வாங்கி்ப்போட்ட இடம் பலமடங்கு விலை உயர்ந்து விற்பனையாகி மகிழ்ச்சியைத் தரும். குறுக்கீடு சக்திகள் அகலும். கொடுக்கல் வாங்கல்கள் சரள நிலைக்கு வரும்.
விருச்சிக புதன்!
ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும் பொழுது தனவரவு திருப்தி தரும். அதே நேரம் விரயங்களும் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். வீடு மாற்றம், இட மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவைகள் நிகழும் நேரமிது. வரும் மாற்றங்களால் நல்ல ஏற்றங்கள் வரலாம். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்பொழுது நடைபெறும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் தொழில் செய்பவர்கள் அதில் புதுத்துறையைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய முன்வருவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சலுகைகளும், சம்பள உயர்வும் கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ-மாணவியர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மூலம் படிப்பு சிறப்பாக அமையும். பெண்களுக்கு குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். பொருளாதார நிலை திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்களையும், சொத்துக்களையும் வாங்கும் சூழ்நிலை உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: அக்டோபர் 18, 19, 23, 24, நவம்பர் 2, 3, 7, 8, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்சு.