துலாம் - தமிழ் மாத ஜோதிடம்
ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2022 முதல் 16-11-2022 வரை
எதையும் ஆராய்ந்து அறிந்த பிறகே செயல்படும் துலாம் ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் உங்கள் ராசிக்கே வரப்போகிறார். எனவே சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாக அமையும். செலவிற்கேற்ற வரவும் வந்து சேரும். ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை தேவை.
துலாம் - சுக்ரன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் ஐப்பசி 2-ந் தேதி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கப் போகிறார். ராசிநாதனும் பலம் பெறும் இந்தநேரம் யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். 'சுக்ரபலம் நன்றாக இருந்தால் வாகன யோகம் முதல் வருமானப் பெருக்கம் வரை நன்றாக அமையும்' என்பார்கள். அந்த அடிப்படையில் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பொருளாதாரத்தில் இருந்த ஏற்ற இறக்க நிலை மாறும்.
துலாம் - புதன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் ஐப்பசி 6-ந் தேதி உங்கள் ராசிக்கு வருகிறார். அங்குள்ள சூரியன் சுக்ரனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தையும், 'புத சுக்ர யோக'த்தையும் உருவாக்குகிறார். எனவே வளர்ச்சி அதிகரிக்கும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்துசேரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல் வரலாம். ஆலயங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு, அலுவலகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும்.
மிதுன - செவ்வாய் வக்ரம்
ஐப்பசி 18-ந் தேதி, மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், தனாதிபதியாகவும் விளங்குவதால் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. வருமானத் தடை அதிகரிக்கும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். எதையும் கொஞ்சம் பொறுமையோடு செய்வது நல்லது. அதோடு செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிவதால், அர்த்தாஷ்டமச் சனி வலுவடைகின்றது. எனவே ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை.
விருச்சிக - புதன் சஞ்சாரம்
ஐப்பசி 23-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன், தன ஸ்தானத்திற்கு வரும் போது பொருளாதார நிலை உயரும். என்றாலும் விரயங்கள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு அகலும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கொஞ்சம் செலவிடும் சூழ்நிலை உண்டு.
விருச்சிக - சுக்ரன் சஞ்சாரம்
ஐப்பசி 26-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்கும் சுக்ரன், தன ஸ்தானத்திற்கு வரும் போது குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்கள் திருப்தி தரும். கடுமையாக உழைப்பதன் மூலமே காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள இயலும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வு பெறுவது பற்றி சிந்திப்பீர்கள். பெண் வழிப் பிரச்சினைகள் முடிவிற்கு வரும்.
குரு வக்ர நிவர்த்தி
உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு, மாதத் தொடக்கத்தில் வக்ரமாக இருக்கிறார். அவர் ஐப்பசி 30-ந் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகை கிரகம். எனவே குரு வக்ர நிவர்த்தியாகும் வேளையில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். எதிரிகளின் பலம் மேலோங்கும். லாபம் வருவது கையில் நிற்காமல் போகலாம். கடன்சுமை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்கும். ஒருசிலருக்கு உத்தியோகத்தில் திடீர் இடமாற்றங்கள் வரலாம்.
இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமிதேவி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- அக்டோபர்: 21, 22, 27, 28, 29, நவம்பர்: 3, 4, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் அா்த்தாஷ்டமச் சனி வலுவடைகிறது. எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆதாயம் தரும் தகவல் கைநழுவிச் செல்லலாம். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச்செல்லுங்கள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும். அவர்களின் மேற்படிப்பு சம்பந்தமாகவோ, மேல்நாடு சென்று பணிபுரிவது தொடர்பாகவோ எடுக்கும் முடிவு, கடைசி நேரத்தில் கைகூடி விடும். பணிபுரியும் பெண்களுக்கு சகப் பணியாளர்களால் தொல்லை ஏற்பட வாய்ப்புண்டு. இடமாற்றச் சிந்தனை மேலோங்கும்.