துலாம் - தமிழ் மாத ஜோதிடம்


துலாம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 16 Nov 2022 6:45 PM GMT (Updated: 16 Nov 2022 6:46 PM GMT)

கார்த்திகை மாத ராசி பலன்கள் 17-11-2022 முதல் 15-12-2022 வரை

வழிபாடுகளில் நம்பிக்கை வைத்து வளர்ச்சி பெறும்் துலாம் ராசி நேயர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், விரயாதிபதி புதனோடும், லாபாதிபதி சூரியனோடும் இணைந்து தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே தேவைக்கேற்ற வருமானம் வந்து சேரும். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால் திடீர், திடீரென முடிவுகளை மாற்றிக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது.

சனி மற்றும் குருவின் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ர நிவர்த்தியாகிப் பலம்பெற்று சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டமச் சனி வலிமையடைகிறது. அஷ்டமத்துச் சனியில் பாதிப் பங்கு வலிமை கொண்டது, அர்த்தாஷ்டமச் சனியாகும். எனவே ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். அடிக்கடி சிறு சிறு உபாதைகள் வந்துகொண்டே இருக்கும். சீரோடும், சிறப்போடும் வாழ நினைத்தாலும், செயல்படுவதில் தடைகள் ஏற்படும். பிறருக்கு செய்யும் நன்மை கூட, அவர்களுக்கு தீமையாகத் தெரியும். பணிபுரியும் இடத்தில் பணப்பொறுப்பில் இருப்பவர்கள் மிகுந்த கவனத்தோடு இருப்பது நல்லது.

உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ர நிவர்த்தியாகி 6-ம் இடத்தில் பலம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். '6-ல் குரு இருந்தால் ஊரில் பகை வரும்' என்பார்கள். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, பகை உணர்வு அதிகரிக்கும் நேரம் என்பதால், இந்த காலகட்டத்தில் பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடிப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது குறை சொல்ல வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது.

தனுசு - புதன் சஞ்சாரம்

கார்த்திகை 12-ந் தேதி, தனுசு ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், சகோதர - சகாய ஸ்தானத்திற்கு செல்லும்போது உடன்பிறப்புகள் வழியில் விரயம் ஏற்படலாம். அவர்களுடைய திருமணம் போன்ற சுபகாரியங்களை முன்னிட்டு பண உதவி செய்யும் சூழல் உருவாகும். சகோதரர்கள் கடல்தாண்டிச் சென்று வேலை செய்யவோ, பட்டப்படிப்பு மேற்கொள்ளவோ உதவி செய்யலாம். உத்தியோகத்தில் பணியிடமாற்றம் உருவாகும். உயர் பதவியை முன்னிட்டு குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று தொலை தூரங்களில் பணிபுரிய நேரிடலாம்.

ரிஷப - செவ்வாய் சஞ்சாரம்

கார்த்திகை 13-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் வக்ர இயக்கத்தில் வருகிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், வக்ரம் பெறுவது நல்லதல்ல. மேலும் அவர் அஷ்டமத்தில் அடியெடுத்து வைப்பதால் பலவித பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல்நலத்தில் தொல்லைகள் அதிகரிக்கும். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்தினாலும் ஆரோக்கியத்தைச் சீராக்கிக் கொள்ள இயலாது. எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு அகலும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க மாட்டார்கள். 'இடமாற்றம் செய்யலாமா?' என்று சிந்திப்பீர்கள்.

தனுசு - சுக்ரன் சஞ்சாரம்

கார்த்திகை 21-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும் போது எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொடுக்கல் - வாங்கல்களில் இருந்த மந்தநிலை மாறும். பயணங்கள் பலன் தரும் விதம் அமையும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்வர். சுபச் செலவுகள் அதிகரிக்கும்.

இம்மாதம் தினந்தோறும் விநாயகப் பெருமானை வழிபட்டு வருவதன் மூலம் வெற்றிகளை வரவழைத்துக் கொள்ளலாம்.

பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 17, 18, 23, 24, 25, 29, 30, டிசம்பர்: 9, 10, 14, 15.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் அர்த்தாஷ்டமச் சனியும் வலுவடைந்துள்ளது. 6-ல் சஞ்சரிக்கும் குருவும் வக்ர நிவர்த்தியாகிவிட்டது. எனவே எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும். வீடுமாற்றங்களும், இடமாற்றங்களும் உருவாகலாம். கணவன் - மனைவிக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். உத்தியோகஸ்தர்களில் ஒரு சிலர் 'பணி நிரந்தரமாகவில்லையே, வேறு வேலைக்கு முயற்சி செய்யலாமா?' என்று சிந்திப்பர். அனுமன் வழிபாடு அல்லல் நீக்கும்.


Next Story