துலாம் - தமிழ் மாத ஜோதிடம்


துலாம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மார்கழி மாத ராசி பலன்கள் 16-12-2022 முதல் 14-01-2023 வரை

கவர்ச்சியாகப் பேசி காரியங்களைச் சாதிக்கும் துலாம் ராசி நேயர்களே!

மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் சகாய ஸ்தானத்தில் இருக்கிறார். அதே நேரம் செவ்வாய், அஷ்டமத்தில் அடியெடுத்து வைக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லைகளும், அதிக விரயங்களும் ஏற்படலாம். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கமும் இருப்பதால் எதையும் யோசித்துச் செய்வது நல்லது. பணிகள் பாதியிலேயே நிற்கும் நிலை உருவாகும்.

புதன் வக்ர இயக்கம்

உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், மார்கழி 3-ந் தேதி தனுசு ராசியில் வக்ரம் பெறுகிறார். பாக்கிய ஸ்தானாதிபதி வலிமை இழப்பது அவ்வளவு நல்லதல்ல. உற்றார், உறவினர்களின் பகை உருவாகும். ஊர் மாற்றம், பூர்வீக சொத்து சம்பந்தமான பஞ்சாயத்துக்கள் திருப்திகரமாக அமையாது. தொழிலில் கூட்டாளிகள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்ள மாட்டார்கள். வாகனப் பழுதுகளால் வாட்டமும், வளர்ச்சியில் தளர்ச்சியும் ஏற்படும். வர்த்தகம் சார்ந்த துறைகளில் நீங்கள் செய்த முயற்சிகளில் குறுக்கீடுகள் வரலாம். பணிபுரியும் இடத்தில் பணப்பொறுப்பில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுங்கள்.

மகர - சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கும், 8-ம் இடத்திற்கும் அதிபதியான சுக்ரன், மார்கழி 15-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திற்கு வரும் சுக்ரனால் ஒருசில நல்ல வாய்ப்புகள் வரலாம். சுக ஸ்தானத்தில் சுக்ரன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத் தொல்லை அகலும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வேற்று மனிதர்களின் ஒத்துழைப்போடு நீங்கள் செய்யும் கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கைநழுவிச் சென்றாலும் வேறு வழியில் ஆதாயம் கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். பெண் பிள்ளைகளின் கல்யாண சீர்வரிசைப் பொருட்களை வாங்குவீர்கள்.

புதன் வக்ர நிவர்த்தி

மார்கழி 24-ந் தேதி, தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன் வக்ர நிவர்த்தியாவதால் விரயங்கள் கூடும். வீடு மாற்றம், நாடு மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை, உங்கள் தகுதிக்கும், தன்மைக்கும் ஏற்ப நடைபெறும். அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறையும். பெற்றோரின் மணிவிழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். உறவினர்கள் பகை மறந்து செயல்படுவர். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவது பற்றி சிந்திப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் அகலும். கேட்ட சலுகைகளும் கிடைக்கும்.

செவ்வாய் வக்ர நிவர்த்தி

மார்கழி 29-ந் தேதி, ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய், களத்திர ஸ்தானத்திற்கும் அதிபதியாகிறார். எனவே பொருளாதாரப் பிரச்சினை அகலும். அருளாளர்களும், அனுபவஸ்தர்களும் சொல்லும் ஆலோசனைகள் அவ்வப்போது கைகொடுக்கும். பற்றாக்குறை நீங்கி பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். அதே நேரத்தில் செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் வீண் விரயங்கள் ஏற்படும். சொத்துக்களை விற்க வேண்டிய நிலை உருவாகும்.

சப்தமாதிபதியாக செவ்வாய் விளங்குவதால் கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். 'வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, அந்த நிலை மாறும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர். வெளிநாட்டுப் பயணம் கைகூடும். அதன் மூலமாக ஆதாயம் தரும் தகவலும் வந்துசேரும். இடம் வாங்குவது, கட்டிடம் கட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும்.

இம்மாதம் வராஹி வழிபாடு வளர்ச்சியைத் தரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 21, 22, 26, 27, ஜனவரி: 6, 7, 11, 12. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கமும், ஆறாமிடத்தில் குருவும், எட்டாமிடத்தில் செவ்வாயும் இருப்பதால் எந்தக் காரியத்தையும் ஒரு முறைக்கு இருமுறை செய்யும் சூழ்நிலை உருவாகும். இடர்பாடு அதிகரிக்கும். உறவினர் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கணவன் - மனைவிக்குள் இணக்கம் ஏற்பட அனுசரித்துச் செல்வது நல்லது. தாய்வழி ஆதரவு உண்டு. பிள்ளைகள் வழியில் சுபச் செலவுகள் ஏற்படும். பணிபுரியும் பெண்கள், சகப் பணியாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.


Next Story