துலாம் - தமிழ் மாத ஜோதிடம்
தை மாத ராசி பலன்கள் 15-01-2023 முதல் 12-02-2023 வரை
பொறுமையும், சகிப்புத் தன்மையும் கொண்டு செயல்படும் துலாம் ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், சனியோடு சேர்ந்து சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அஷ்டமத்தில் செவ்வாய் இருக்கிறார். ஜென்ம கேதுவின் ஆதிக்கத்தாலும், மற்ற கிரகங்களின் சஞ்சாரத்தாலும் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வதே நல்லது.
மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், சுக ஸ்தானத்தில் சனியோடும், லாபாதிபதி சூரியனோடும் இணைந்து சஞ்சரிக்கிறார். விரயாதிபதி புதன் சகாய ஸ்தானத்தில் இருக்கிறார். எனவே குடும்பச் சுமை கூடும். விரயங்கள் அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு என்பதால் வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்வீர்கள். 8-ல் செவ்வாய் இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அடிக்கடி வந்து அலைமோதும்.
6-ல் குரு இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் உண்டு. ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால் சர்ப்ப தோஷ அமைப்பு இருக்கிறது. எனவே ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை உருவாகும். எதிலும் இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா என்ற இரட்டித்த சிந்தனை உருவாகும். சர்ப்ப கிரகங்களுக்குரிய ஆலயங்களுக்கு அனுகூலம் தரும் நாட்களில் சென்று முறையான வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. அதுமட்டுமல்லாமல் வாழ்க்கைத் துணை வழியே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் அமைதி நிலவ வழிபிறக்கும்.
சூரியன் - சனி சேர்க்கை
உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. லாப ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சூரியன். ஆதிபத்யங்கள் நல்ல இடமாக இருந்தாலும், கிரகங்கள் ஒன்றுக்கொன்று பகைக் கிரகங்களாக இருப்பதால் அவற்றின் சேர்க்கைக் காலங்களில் சில தடுமாற்றங்களும், தடைகளும் வரத்தான் செய்யும். தாய் - தந்தை உடல்நலத்தில் கவனம் தேவை. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. பணிபுரியும் இடத்தில் சகப் பணியாளர்களால் பிரச்சினைகள் ஏற்படும். உயர்மட்ட அதிகாரிகள் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகளைக் கொடுத்து மனக்கலக்கத்தை ஏற்படுத்துவர். பணப்பொறுப்புகளில் இருப்பவர்கள் மிகவும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. திறமைக்குரிய அங்கீகாரம் கொடுக்கமாட்டார்கள். புதிய இடத்திற்கு வேலைக்குச் செல்ல முயற்சித்தாலும் அதில் தாமதம் ஏற்படும்.
கும்ப - சுக்ரன் சஞ்சாரம்
தை 9-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்கும் சுக்ரன், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்லும்பொழுது ஒரு சில தடைப்பட்ட காரியங்கள் துரிதமாக நடைபெறும். அண்ணன் -தம்பிகளுக்குள் இருந்த பிரச்சினைகள் மாறும். கண்ணியமிக்க நண்பர்கள் மூலம் கடமையில் ஏற்பட்ட தொல்லையை அகற்றிக் கொள்வீர்கள். புண்ணிய காரியங்கள் செய்வதில் மனம் செல்லும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிய வழிபிறக்கும். பொருளாதார நெருக்கடி ஓரளவு அகலும்.
மகர - புதன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தை 21-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். சுக ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பது யோகம்தான். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இல்லம் கட்டிக் குடியேற வேண்டும் அல்லது சொத்துக்கள் வாங்க வேண்டுமென்ற எண்ணம் உருவாகும். அதை செயல்படுத்தியும் வெற்றி காண்பீர்கள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் கல்யாண முயற்சி, பெற்றோரின் மணிவிழாக்கள் நடைபெற வழிபிறக்கும் நேரம் இது.
இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால், இனிய பலன் கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜனவரி: 17, 18, 22, 24, பிப்ரவரி: 1, 2, 3, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: பிரவுன்.