துலாம் - தமிழ் மாத ஜோதிடம்


துலாம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2023 முதல் 15-06-2023 வரை

நீதிக்கும், நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் துலாம் ராசி நேயர்களே!

வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் மாதத் தொடக்கத்தில் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியிலேயே கேதுவும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரித்து சர்ப்ப தோஷத்தை உருவாக்குகிறார்கள். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும். சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும். பொருளாதார நிலை திருப்தி தரும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் ஆதரவோடு நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

ராகு-கேது சஞ்சாரம்

பின்னோக்கி நகரும் கிரகங்களான ராகுவும், கேதுவும் மாதத்தொடக்கத்திலேயே சர்ப்ப தோஷ அமைப்பில் இருக்கிறார்கள். கேது ஜென்மத்திலும், ராகு சப்தமத்திலும் இருப்பதால் ஏற்றமும், இறக்கமும் கலந்த வாழ்க்கை அமையும். எதிரிகள் பலம் கூடுதலாகத்தான் இருக்கும். வரவு வரும் முன்னதாகவே செலவு காத்திருக்கும். வாய்ப்புகள் வந்தாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாமல் போகலாம். சம்பள உயர்வு காரணமாக குடும்பத்தில் ஓரிருவர் வெளியேறிச் சென்று வேலை பார்க்க நேரிடலாம். குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.

கடக - சுக்ரன்

வைகாசி 16-ந் தேதி கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள நீச்சம் பெற்ற செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு தன- சப்தமாதிபதியான செவ்வாய், உங்கள் ராசிநாதன் சுக்ரனோடு சேரும்பொழுது அற்புதமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் செய்ய நினைத்த காரியத்தை மறுகணமே செய்து முடிப்பீர்கள். இனத்தார் பகை மாறும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

ரிஷப - புதன்

வைகாசி 18-ந் தேதி புதன் ரிஷப ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 12-க்கு அதிபதி 8-ம் இடத்திற்கு வருவது மிக அற்புதமான நேரமாகும். 'விபரீத ராஜயோக' அடிப்படையில் தடைபட்ட பணிகள் துரிதமாக நடைபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவோடு திடீர் முன்னேற்றம் காண்பீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். அதனால் பலனும் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டு.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும். தலைமைப் பதவிகள் தேடிவரும். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு விடிவு காலம் தொடங்கிவிட்டது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். கலைஞர்களுக்கு அடுக்கடுக்காக ஒப்பந்தங்கள் வரலாம். தேக்க நிலை மாறி, பெண்கள் அனைவரும் ஊக்கத்தோடு செயல்படும் நேரம் இது. உடன் இருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர். தம்பதிகளின் ஒற்றுமை பலப்படும். பணிபுரியும் பெண்களுக்கு பாராட்டும், புகழும் கூடும்.

பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே: 23, 24, 27, 28, ஜூன்: 3, 4, 8, 9.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.


Next Story