துலாம் - ஆவணி தமிழ் மாத ஜோதிடம்


துலாம் - ஆவணி தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆவணி மாத ராசி பலன்கள் 18-08-2023 முதல் 17-09-2023 வரை

எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காணும் துலாம் ராசி நேயர்களே!

ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே கேதுவும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் இருக்கிறார்கள். மேலும் இம்மாதம் மீண்டும் அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் வரப்போகிறது. எனவே ஆரோக்கியத் தொல்லையும் அதிக விரயங்களும் ஏற்படலாம். மீண்டும் பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். இடமாற்றம், ஊர் மாற்றம், தொழில் மாற்றம் போன்றவை வந்துசேரலாம். எதிரிகளின் பலம் கூடும் என்பதால், எதையும் யோசித்து செய்வது நல்லது.

கடக - சுக்ரன்

ஆவணி 1-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், 8-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது மாற்றங்கள் உருவாகும். கைநழுவிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் வந்துசேர்வதோடு, புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து எதிர்காலம் பற்றி முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தபடியே இடமாற்றமும், இலாகா மாற்றமும் வரலாம். விலை உயர்ந்த வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.

கன்னி - செவ்வாய்

ஆவணி 2-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன - சப்தமாதிபதியான செவ்வாய், விரய ஸ்தானத்திற்கு வரும்பொழுது விரயங்கள் அதிகரிக்கும். சுப காரியங்களுக்காக செலவிடுவது நல்லது. வாங்கிய சொத்துகளை விற்க நேரிடும். அதில் வரும் ஆதாயத்தைக் கொண்டு பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக செலவிடுவீர்கள். தொழில் பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். இருப்பினும் புதிய பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வது பற்றி யோசிப்பீர்கள். பாகப்பிரிவினை சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும்.

மகர - சனி

சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, மகர ராசிக்கு வக்ர இயக்கத்தில் வருகிறார். வாக்கிய கணித ரீதியாக வரும் இந்த மாற்றத்தில், உங்கள் ராசிக்கு சனி பகவான், அர்த்தாஷ்டமச் சனியாக வருகிறாா். சுமார் 4 மாதங்களே மகரத்தில் சஞ்சரிக்கும் சனியால், பண நெருக்கடி அதிகரிக்கும். பல காரியங்கள் தடையாக நிற்கும். நடக்கும் தொழிலில் பங்குதாரர்களோடு ஏற்பட்ட பிரச்சினையால் தடைபட்டு நிற்கக்கூடும். பிள்ளைகளாலும் பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ஒருசிலர் பணி மாற்றம் செய்ய முன்வருவர்.

புதன் வக்ர நிவர்த்தி

சிம்மத்தில் சஞ்சாித்து வரும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். பாக்கிய ஸ்தானாதிபதி வக்ர நிவர்த்தியாவது நன்மைதான். படிப்படியாக தடைப்பட்ட காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். பணப்புழக்கமும், சுபவிரயங்களும் அதிகரிக்கும். சொத்து விற்பனையால் லாபம் உண்டு. சொந்தங்கள் உதவிக்கரம் நீட்டுவர். எதிர்காலத்தைப் பற்றிய கவலை அகலும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகள் நீங்கள் கேட்ட சலுகைகளைக் கொடுப்பர்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு பலத்த போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், சலுகைகள் கிடைத்து சந்தோஷமடைவர். கலைஞர்களுக்கு கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் மீண்டும் வரலாம். மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும். பெண்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும். வீடுமாற்ற சிந்தனைகள் மேலோங்கும். பணிபுரியும் இடத்தில் சகப் பணியாளர்களால் வரும் தொல்லைகளை சமாளிக்க வேண்டிய சூழல் உருவாகும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 18, 19, 23, 24, 29, 30, செப்டம்பர்: 8, 9, 10, 13, 14.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.


Next Story