மீனம் - தமிழ் மாத ஜோதிடம்


மீனம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 17 Oct 2022 6:45 PM GMT (Updated: 17 Oct 2022 6:46 PM GMT)

ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2022 முதல் 16-11-2022 வரை

வளைந்து கொடுத்து வாழ்வில் முன்னேறும் மீன ராசி நேயர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உச்சம் பெற்ற புதன் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய திருப்பங்கள் ஏற்படும்.

துலாம் - சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் ஐப்பசி 2-ந் தேதி துலாம் ராசியில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். அஷ்டமாதிபதி அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் கூடுதல் கவனம் தேவை. இழப்புகளும், விரயங்களும் வந்து சேரும். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம், இலாகா மாற்றம் திருப்தி அளிக்காது. நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்ளமாட்டார்கள். நாடு மாற்றம், வீடுமாற்றம் போன்றவை எதிர்பார்த்தபடி வந்து சேரும். சகோதர வர்க்கத்தினர் சச்சரவின் காரணமாக உங்களை விட்டு விலக நேரிடலாம். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரம் இது.

துலாம் - புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், இப்போது அஷ்டம ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கிறார். ஐப்பசி 6-ந் தேதி துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு. கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற புதன் 8-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல வாய்ப்புகளை வர வழைத்துக் கொடுப்பார். கரைந்த சேமிப்புகளை மீண்டும் உயர்த்துவீர்கள். கல்யாணம் போன்ற சுப காரியங்கள் இல்லத்தில் நடைபெற எடுத்த முயற்சி கைகூடும். கல்வி, வேலைவாய்ப்பு சம்பந்தமாக ஏதேனும் புது முயற்சிகளில் நீங்கள் ஈடுபட்டிருந்தால் அதில் அனுகூலம் கிடைக்கும்.

மிதுன - செவ்வாய் வக்ரம்

ஐப்பசி 18-ந் தேதி, மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ரம் பெறுகிறார். மேலும் மகரத்தில் உள்ள சனியையும் அவர் பார்க்கிறார். சுக ஸ்தானத்தில் செவ்வாய் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. துணிவும், தன்னம்பிக்கையும் குறையும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. ஆரோக்கியத் தொல்லைகள் கூடும். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட தொல்லைகளால் அவதிப்பட நேரிடும். 'பணவிரயம் அதிகரிக்கிறதே' என்று கவலைப்படுவீர்கள். இந்தக் காலத்தில் பரிகாரங்களும், வழிபாடுகளும் கைகொடுக்கும்.

விருச்சிக - புதன் சஞ்சாரம்

ஐப்பசி 23-ந் தேதி, விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் 9-ம் இடத்திற்கு வருவது யோகம்தான். வீடு கட்டுவது, வீடு வாங்குவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். தந்தை வழிச் சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும்.

விருச்சிக - சுக்ரன் சஞ்சாரம்

ஐப்பசி 26-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கிருந்து கொண்டு சகாய ஸ்தானத்தைப் பார்க்கிறார். எனவே சில நல்ல காரியங்கள் நடைபெறும் நேரம் இது. கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பர். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஊதிய உயர்வு இப்பொழுது கிடைப்பதற்கான அறிகுறி தென்படும்.

குரு வக்ர நிவர்த்தி

உங்கள் ராசிநாதன் குரு இதுவரை மாதத் தொடக்கத்தில் வக்ரமாக இருக்கிறார். ஐப்பசி 30-ந் தேதி அவர் வக்ர நிவர்த்தியாகிறார். எனவே ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்பை உங்களிடம் ஒப்படைப்பதோடு, சம்பள உயர்வும் கொடுக்கலாம். பொதுவாக ராசிநாதன் வலுப்பெற்று இருக்கும் இந்த நேரத்தில், நீங்கள் எடுக்கும் புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கவனத்தோடு அனைத்தையும் கையாளுங்கள்.

இம்மாதம் பைரவர் வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 18, 19, 27, 28, 29, நவம்பர்: 2, 3, 7, 8, 9.

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் உங்கள் ராசிநாதன் குரு வக்ர இயக்கத்தில் இருப்பதாலும், ராசியைப் பலம்பெற்ற சனி பார்ப்பதாலும் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். ஆதாயத்தை விட விரயங்கள் கூடும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்ய இயலாது. கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். ஆயினும் சனி பார்வை இருப்பதால் சிறுசிறு சச்சரவுகளும் வந்துபோகும். பணிபுரியும் பெண்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. சகப் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.


Next Story