மீனம் - குருப்பெயர்ச்சி பலன்கள்


மீனம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
தினத்தந்தி 15 May 2022 6:29 PM IST (Updated: 15 May 2022 6:31 PM IST)
t-max-icont-min-icon

ஜென்மத்தில் வந்தது குருபகவான்; சிந்தித்து செயல்பட்டால் நன்மை வரும்

உதவும் குணத்தால் பலரின் உள்ளத்தில் இடம்பிடிக்கும் மீன ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 13.4.2022 முதல் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கப் போகிறார். ராசிநாதன் குரு உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம்தான். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். தடைகள் தானாக விலகும். தாமதங்கள் அகலும். குருவின் பலம்பெற்ற பார்வையும், சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் பலமும் உங்களுக்கு பலவிதங்களில் நன்மையை வழங்கப் போகிறது.

குரு இருக்கும் இடத்தின் பலன்

நவக்கிரகங்களில் சுபகிரகமாக விளங்கும் குருபகவான், உங்கள் ராசிக்கு அதிபதியானவர். அவர் உங்கள் ராசியிலேயே பலம் பெற்று சஞ்சரிக்கிறார். ராசிநாதன் பலம்பெற்றிருந்தால் யோசிக்காமல் எதையும் செய்யலாம் என்பது முன்னோர் வாக்கு. உங்கள் ராசிநாதனாக மட்டுமல்லாமல், 10-ம் இடத்திற்கும் அதிபதியாக இருப்பவர் குரு பகவான். எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகள் படிப்படியாக இல்லத்தில் நடைபெறும்.

குருவின் பார்வை பலன்

இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான், உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆகிய இடங்களை பார்க்கிறார். குருவின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால், மக்கள் போற்றும் அளவிற்கு செல்வாக்கும், மகத்தான பதவி வாய்ப்பும் கிடைக்கலாம். குறிப்பாக முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு வந்துசேரும். பொன்னும், பொருளும், போற்றுகின்ற செல்வாக்கும் அடைவீர்கள். பிள்ளைகளுக்கு தகுந்த வேலை கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள்.

குருவின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால், களத்திர ஸ்தானம் புனிதமடைகின்றது. மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான வழிபிறக்கும். திருமணம் ஆனவர்களாக இருந்தால் வாழ்க்கைத் துணை வழியே நன்மை அதிகரிக்கும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். சேமிப்பு உயரும். குடும்ப ஒற்றுமை பலப்படும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.

குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால், பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகின்றது. எனவே பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். 'கூட்டு முயற்சிகளில் இருந்து விலகி, தனித்து இயங்கலாமா?' என்று யோசிப்பீர்கள்.

நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்சுய சாரத்தில் குரு சஞ்சாரம் (13.4.2022 முதல் 30.4.2022 வரை)

உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் குரு, பூரட்டாதி நட்சத்திரக் காலில் தனது சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்களை வாரி வழங்குவார். குறிப்பாக வருமானம் உயரும். வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும்.

சனி சாரத்தில் குரு சஞ்சாரம் (1.5.2022 முதல் 24.2.2023 வரை)

உங்கள் ராசிக்கு 11, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். உத்திரட்டாதி நட்சத்திரக் காலில், லாப- விரயாதிபதியாக விளங்கும் சனியின் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது வரவும், செலவும் சமமாக இருக்கும். காலையில் வந்த வரவு மாலையில் செலவாகிவிடலாம். வெளிநாடு செல்லும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். கொஞ்சம் யோசித்துச் செயல்படுவதே நல்லது. அசையாச் சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.

புதன் சாரத்தில் குரு சஞ்சாரம்(25.2.2022 முதல் 22.4.2023 வரை)

உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். ரேவதி நட்சத்திரக் காலில், சுக ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானத்திற்கு அதிபதியான புதன் சாரத்தில் குரு பகவான் உலாவரும் பொழுது இடம், பூமியால் லாபம் கிடைக்கும். இல்லம் கட்டும் வாய்ப்பு கைகூடும். குடும்பத்தில் கல்யாணம், சீமந்தம், காதுகுத்து போன்ற சுப காரியங்கள் நடந்தேறும். பெற்றோரின் மணிவிழாவையும் சிறப்பாக நடத்தி வைப்பீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும்.

குருவின் வக்ர இயக்கம் (20.7.2022 முதல் 16.11.2022 வரை)

உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் குரு வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது உடல்நலக் குறைபாடு ஏற்படலாம். மனபயம் அதிகரிக்கும். 'மாற்றங்கள் வந்தால் ஏற்றுக் கொள்ளலாமா? வேண்டாமா?' என்று சிந்திப்பீர்கள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்பை தந்து, உங்களை திணறடிப்பார்கள். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் குரு என்பதால், ஒருசில நல்ல காரியங்கள் நடைபெறலாம். புதுமனை புகுவிழா நடத்தும் யோகம் உண்டு.

பெண்களுக்கான பலன்கள்

இந்தக் குருப்பெயர்ச்சி நன்மைதரும் பெயர்ச்சியாகவே அமையும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிக்கும் ஆற்றல் பிறக்கும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்து என்று, இல்லத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும். கணவன் - மனைவிக்குள் அன்பும், ஆதரவும் கூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கிடைக்கும்.

வளம் தரும் வழிபாடு

இந்தக் குருப்பெயர்ச்சி இனிய பெயர்ச்சியாக அமைய வியாழன் தோறும் குருகவசம் பாடி குருபகவானை வழிபாடு செய்வதோடு, குரு தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கும் தலங் களுக்குச் சென்றும் வழிபட்டு வரலாம். இதனால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.


Next Story