ரிஷபம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீர்ஷம் 1, 2 பாதங்கள் வரை)
(பெயரின் முதல் எழுத்துக்கள் : இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்)
வந்தது விரய குருவாகும்! வரவு முழுவதும் செலவாகும்!
உழைப்பையே மூலதனமாக்கிச் செயல்படும் ரிஷப ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 22.4.2023 முதல் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். 12-ம் இடம் என்பது பயணங்களையும் விரயங்களையும் குறிக்கும் இடமாகும். அந்த இடத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது விரயங்கள் கூடுதலாக இருக்கும். ஆரோக்கியத்திலும் அடிக்கடி அச்சுறுத்தல்களும், மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு திக்குமுக்காட வைக்கும். உங்கள் சுய ஜாதகத்தில் குரு இருக்கும் பாதசாரம் அறிந்து அதற்குரிய தல வழிபாடுகளை மேற்கொண்டால் விரய குருவின் ஆதிக்கம் கூட வெற்றி தரும் நேரமாக அமையும்.
குரு இருக்கும் இடத்தின் பலன்!
ஆண்டுக்கு ஒருமுறை பெயர்ச்சியாகி அனைத்து வளங்களையும் தரும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகை கிரகமாவார். எதிரியாக இருந்தாலும் எதிரில் வரும்பொழுது கும்பிட்டால், உதறித் தள்ளாமல் ஒன்று சேர்ந்து வாழ வழிவகுப்பவர் குரு பகவான். அந்த குரு பகவான் 8-ம் இடத்திற்கு அதிபதியாகி 12-ல் வரும்பொழுது 'கெட்டவன் கெட்டில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கு ஏற்ப வெற்றிக் கனியை எட்டிப்பிடிப்பீர்கள்.
இடமது பன்னிரெண்டில்
இயல்பாக குருவும் வந்தால்
கடமையில் கவனம் தேவை!
காசுகள் விரயமாகும்!
உடமையால் சொத்து சேரும்!
உடல்நலம் அச்சுறுத்தும்!
தடம் புரளாமல் வாழத்
தைரியம் கைகொடுக்கும்!
என்று ஜோதிட சாஸ்திரம் செல்கிறது.
அந்த அடிப்படையில் விரய ஸ்தானத்தில் குரு வரும் பொழுது விரயங்கள் அதிகரிக்கலாம். எனவே சுபவிரயங்களாக மாற்றிக் கொள்ளுங்கள். உடல்நலத்தில் சிறுசிறு தொல்லைகள் வந்தாலும் உடனுக்குடன் மருத்துவ ஆலோசனைபெற வேண்டும்.
குருவின் வக்ர காலம்! (12.9.2023 முதல் 20.12.2023 வரை)
இக்காலத்தில் குரு பகவான் அசுவதி மற்றும் பரணி நட்சத்திரக் காலில் வக்ரம் பெறுகின்றார். அப்பொழுது சில நல்ல காரியங்கள் முடிவடையும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அருளாளர்களின் ஆசியும், அனுபவஸ்தர்களின் ஆலோசனையும் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுக்கும். மாலைக்காக காத்திருக்கும் பிள்ளைக்கு மாலையும், வேலைக்காக காத்திருக்கும் பிள்ளைகளுக்கு வேலையும் கிடைக்கும். உங்கள் ராசிநாதனாகவும், சுக்ரனுக்கு பகை கிரகமாக வும் விளங்கும் குரு, வக்ரம் பெறுவதால் இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும். உத்தியோகத்தில் உயர்வும், பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்பு களும் கிடைக்கும்.
வெற்றிகளைக் குவிக்கும் வியாழனின் பார்வை!
குருவின் பார்வை பலத்தால் 4, 6, 8 ஆகிய இடங்கள் புனிதமடைந்து அதன் மூலம் நல்ல பலன்கள் இல்லம் தேடி வரப்போகின்றது. குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் தாய்வழி ஆதரவு கிடைக்கும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். உறவினர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். கடல் தாண்டிச் சென்று பணிபுரிய வேண்டுமென்று விரும்பியவர்களுக்கு அது கைகூடுவதற்கான அறிகுறிகள் தென்படும். இடம், வீடு வாங்குவது அல்லது விற்பது, பழைய வாகனத்தைக் கொடுத்து விட்டுப் புதிய வாகனம் வாங்குவது சம்பந்தமாக நீங்கள் செய்த முயற்சியும் கைகூடும்.
குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்க வில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது பஞ்சாயத்துக்கள் சாதகமாக அமையும். வாங்கிய கடனை கொடுக்க வழிபிறக்கும்.
குருவின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால் ஆயுள் ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே உடல்நலத்தில் இருந்த குறைபாடுகள் ஒவ்வொன்றாக மாறும். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். இழந்த பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். தொழிலில் ஏற்பட்ட குறுக்கீடுகள் விலகும். வியாபாரத்தில் இதுவரை ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்வீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு நீண்ட தூரத்திற்கான மாறுதல் கிடைக்கும்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்!
அசுவதி நட்சத்திரக் காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:
குரு பகவான் விரய ஸ்தானமான 12-ம் இடத்தில் ராகு சேர்க்கை பெற்று இருப்பதோடு அசுவதி நட்சத்திரக்காலில் கேதுசாரத்தில் சஞ்சரிக்கப் போவதால் மிக மிக கவனத்தோடு செயல்பட வேண்டும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். வருமானப் பற்றாக்குறை அதிகரிக்கும். தேக ஆரோக்கியத்தில் அடிக்கடி தொல்லைகளும் அதன் விளைவாக மன சஞ்சலங்களும் கூடும். பணக்கவலை ஒருபுறம், மனக்கவலை மற்றொரு புறம் என்ற நிலை உருவாகும். தொழில் செய்பவர்கள், போட்ட முதலீட்டை எடுத்துவிட வேண்டுமென்று பாடுபடுவீர்கள்.
பரணி நட்சத்திரக் காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:
குரு பகவான் பரணி நட்சத்திரக் காலில் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது நன்மையும், தீமையும் கலந்து நடைபெறும். உங்கள் ராசிநாதனாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன் என்பதால் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தடைகள் ஒவ்வொன்றாக விலகும். தெய்வ தரிசனங்கள் செய்வதன் மூலம் நல்ல வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள இயலும். தொழிலில் கிளைத் தொழில் தொடங்கலாமா என்ற சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு வெளியில் வந்து சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது, ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் கூட கவனம் செலுத்தும் நேரமிது.
கார்த்திகை நட்சத்திரக்காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:
12-ம் இடமான விரய ஸ்தானத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் சூரிய சாரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வியாபாரத்தில் வேலை ஆட்களால் ஏற்பட்ட இடையூறுகள் அகலும். மண், பூமியால் லாபம் உண்டு. பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் போட்டிகள் அகலும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பும், மழலையின் ஓசை கேட்கும் வாய்ப்பும் ஏற்படும்.
ராகு-கேது பெயர்ச்சி!
8.10.2023 அன்று மீன ராசியில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகின்றார்கள். குருவோடு சேர்ந்திருந்த ராகு விலகுவதால் குரு பகவான் கூடுதல் பலம் பெறுகின்றார். அவரது பார்வைக்கு பலன் அதிகம் கிடைக்கும். லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கப் போவதால் வருமானம் திருப்திகரமாக இருக்கும். வளர்ச்சி கூடும். எண்ணங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். பஞ்சம கேதுவின் ஆதிக்கத்தால் புனித காரியங்கள் நடைபெறும். தகராறு செய்தவர்கள் தானாக விலகுவர். உத்தியோகத்தில் உயர்மட்ட அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக கொஞ்சம் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்கள், இடமாற்றங்கள் இனிமை தரும் விதம் அமையும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் ஏற்படும். ஆன்மிகப் பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உங்கள் பெயரிலேயே அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பழைய ஆபரணங் களைக் கொடுத்துவிட்டுப் புதிய ஆபரணங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். பணிபுரியும் பெண் களுக்கு இதுவரை தடைப்பட்ட பதவி உயர்வு தானாக வந்து சேரும். மேலதிகாரிகளின் பாராட்டுக்களால் உற்சாகமடைவீர்கள்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
இல்லத்துப் பூஜை அறையில் சிவ குடும்பம் படம் வைத்து விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள். பிரதோஷ நேரத்தில் நந்தீஸ்வரர் பதிகம் பாடி நந்தியம் பெருமான், சிவன், உமையவளை வழிபட்டால் நல்லது நடக்கும்.