ரிஷபம்- சனிப்பெயர்ச்சி பலன்கள்
27-12-2020 முதல் 20-12-2023 வரை
ஒன்பதாமிடத்தில் சனி, உயர்வுகள் வந்திடும் இனி! ரிஷப ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 9-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கின்றார். அஷ்டமத்துச் சனி விலகிவிட்டது. எனவே இனி தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. தொழில் ஸ்தானத்திற்கும், பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் என்பதால், சனி பகவான் தன் சொந்த வீடான மகர ராசியில் சஞ்சரிக்கும் பொழுது எண்ணற்ற நற்பலன்களை வழங்குவார். தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கின்றார். அந்த குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. மேலும் அங்குள்ள குருவோடு இப்பொழுது சனியும் சேர்ந்து 'நீச்சபங்க ராஜயோகம்' ஏற்படப் போகின்றது. மகரத்தில் குரு இருக்கும் பொழுது, சனி சாதகமான பலன்களை ஏராளமாக கொடுக்கலாம்.
பொன் பொருள் சேர்க்கை உண்டு
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பிதுர்ரார்ஜித ஸ்தானத்திற்கு சனி வருகின்றார். அதுமட்டுமல்லாமல் 9-ம் இடம் பாக்கிய ஸ்தானமாகவும் கருதப்படுகின்றது. அதே நேரத்தில் 10-ம் இடம் எனப்படும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியாக சனி விளங்குவதால், இதுவரை தடைப்பட்ட உயர்வுகள் தானாக வந்து சேரும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும் விதத்திலேயே இந்த சனிப்பெயர்ச்சி அமைகின்றது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகளும், எதிர்பார்த்த ஊதிய உயர்வும் வந்து சேரும். கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக மாறும். பிதுர்ரார்ஜித சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். உடல்நலம் சாதாரண சிகிச்சையிலேயே குணமாகி உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் 3, 6, 11 ஆகிய மூன்று இடங்களையும் முறையாகப் பார்க்கின்றார். எனவே இதுவரை பிரச்சினையுடன் வாழ்ந்த உங்களுக்கு மன அமைதி கிடைக்கப்போகின்றது. 3-ம் இடத்தை சனி பார்ப்பதால் முன்னேற்றப் பாதையில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உடல் ஆரோக்கியம் சீராகும். மேலும் யோககாரகனாக சனி விளங்குவதால், உத்தியோகத்தில் திடீரென புதிய பொறுப்புகளும், அதற்கேற்ற விதம் சம்பள உயர்வுகளும் கூட கிடைக்கலாம்.
சனியின் பார்வை 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் பதிவதால், பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரிய சாரத்தில் சனி சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், துணிந்து சில முடிவுகளை எடுத்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். சுக ஸ்தானாதிபதி சூரியன் என்பதால், சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், வெற்றிச் செய்திகள் வீடு வந்துசேரும். குடும்பத்தில் விரிசல்கள் அகன்று உறவு பலப்படும். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணி தொடரும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, திருமண வாய்ப்புகள் கைகூடும். திடீர் திருப்பங்கள் ஏற்படும். இடையில் கும்ப ராசியில் சனி சஞ்சரிக்கப் போகின்றார். எனவே 'சொந்த வீடு கட்டியும் அதில் வசிக்க முடியவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, அதில் குடியேறும் முயற்சி கைகூடும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில், மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 10-ல் குரு வருவதால் பதவி மாற்றங்களும், இடமாற்றங்களும் உருவாகலாம். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, 'விபரீத ராஜயோக' அடிப்படையில் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சி நடக்க உள்ளது. அப்போது மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு மனநிம்மதி குறையும். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். வாங்கிய இடத்தை விற்க நேரிடும். தூரதேசத்தில் உள்ள சொந்தங்களால் சில நன்மைகள் ஏற்படும். குடும்ப ரகசி யங்களை வெளியில் சொல்வதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படலாம்.
8.10.2023-ல் நடைபெறும் பெயர்ச்சியின்போது, மீனத்தில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அப்பொழுது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம் பலம்பெறுகின்றது. வெளிநாட்டு வணிகம் லாபம் தரும். பிள்ளைகள் வெளிநாடு செல்ல எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, இதுவரை கேட்டுக் கிடைக்காத சலுகைகள் இப்பொழுது கிடைக்கலாம்.
வெற்றிக்குரிய வழிபாடு
சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி பகவானை வழிபட்டு வருவதோடு, இல்லத்து பூஜை அறையில் அபிராமி அம்மன் படம் வைத்து, அபிராமி அம்மன் பதிகம் பாடி வழிபட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எளிதில் வெற்றி கிடைக்கும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி வக்ரம் அடைகிறார்.
இந்த காலத்தில் மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். தொழிலில் கூட்டாளிகளை நம்பி செயல்பட இயலாது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம். இக்காலத்தில் யாரையும் பகைத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுதும் கவனம் தேவை.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
இந்த சனிப்பெயர்ச்சி, உங்கள் ராசிக்கு சாதகமான பெயர்ச்சியாகவே இருக்கின்றது. கல்யாணம் மற்றும் குழந்தை பாக்கியம் போன்றவற்றில் இதுவரை இருந்த தடைகள் அகலும். குடும்ப ஒற்றுமை பலப்படும். கணவன்-மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பொருளாதார நிலை உயரும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். ஆரோக்கியம் சீராகும். பணிபுரியும் பெண்களுக்கு உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகளும் எளிதில் கிடைக்கும். சனியின் வக்ர காலத்தில் பிறருக்குப் பொறுப்புச் சொல்வதால் பிரச்சினைகள் உருவாகும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர்.