ரிஷபம் - ஆண்டு பலன் - 2022


ரிஷபம் - ஆண்டு பலன் - 2022
x
தினத்தந்தி 25 April 2022 10:06 AM GMT (Updated: 2022-04-25T15:42:38+05:30)

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீர்ஷம் 1, 2 பாதங்கள் வரை)

பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்

கல்யாண வாய்ப்பு கைகூடும்

ரிஷப ராசி நேயர்களே!

இந்தப் புத்தாண்டில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் சப்தம- விரயாதிபதியான செவ்வாயோடு கூடிச் சஞ்சரிக்கிறார். புத்தாண்டிற்கு முதல்நாளே குரு பகவான், தன் சொந்த வீடான மீனத்திற்கு வந்துவிட்டார். சனி பகவான், பாக்கிய ஸ்தானத்தில் பலம்பெற்று இருக்கிறார். எனவே இந்த ஆண்டு வளர்ச்சி நன்றாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

புத்தாண்டின் தொடக்க நிலை

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் செவ்வாயோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்த குறுக்கீடு சக்திகள் அகலும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். வெளிநாட்டில் உள்ள பிரபல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். ஒப்பந்த பணியாளர்களுக்கு பணி நிரந்தரமாகும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும்.

விரய ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. 6-ம் இடத்தில் கேது சஞ்சரிக்கிறார். எனவே மறைமுக எதிர்ப்புகள் உங்களுக்கு அதிகமாகவே இருக்கும். ஆனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. எதிர்ப்புக்கு மத்தியிலேயே உங்கள் வாழ்க்கை அமையும். மற்றவர்கள் செய்ய முடியாது என்று சொன்ன காரியத்தை, முடித்துக் காட்டுவீர்கள். துணிவும், தன்னம்பிக்கையும் கொண்டவர் நீங்கள் என்பதால், எதையும் சாதிக்கும் வல்லமை உங்களிடத்தில் உண்டு. ஆரோக்கியத் தொல்லை அகல, ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.

ஜென்மத்தில் இருந்த ராகு விலகி, மேஷத்திற்கு வந்து விட்டார். ஆனால் அவர், சூரியனோடு இணைந்திருப்பதால் விரயங்கள் அதிகமாகத்தான் இருக்கும். குடும்பப் பிரச்சினையின் காரணமாக மனநிம்மதி குறையும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்ள மாட்டார்கள். பயணம் மற்றும் விரயத்திற்குரியது 12-ம் இடம் என்பதால், பயணங்கள் அதிகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, நீண்ட தூரத்திற்கான மாறுதல் வந்துசேர வாய்ப்புள்ளது.

குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பதால், தொழில் வளர்ச்சி திருப்தியாக இருக்கும். புது வகையான கைத் தொழில்களில் மனம் செல்லும். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தவர்களுக்கு, இப்போது அதற்கான வாய்ப்பு உருவாகும். வசதி வாய்ப்புகள் பெருகும்.

உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில், சனி பகவான் சஞ்சரிப்பது யோகம்தான். அங்கிருந்து இந்த வருட இறுதியில்தான் பெயர்ச்சியாகிறார். எனவே அதுவரை 9-ம் இடத்தில் இருந்து உங்களுக்கு கிடைக்க வேண்டிய பல நன்மைகளை வழங்கப் போகிறார். குறிப்பாக முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கு வந்துசேரும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பிள்ளைகளின் நலன் குறித்து சிந்திப்பீர்கள். துணிந்து எடுத்த முடிவுகள் உங்களுக்கு வெற்றியைத் தரும்.

குருவின் பார்வை பலன்

ஆண்டின் தொடக்கத்தில் மீனத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். எனவே அந்த இடங்கள் புனிதமடைகின்றன. அண்ணன் - தம்பிகளின் அரவணைப்பு குறைந்தாலும், குரு பார்வை இருப்பதால் உடனுக்குடன் பிரச்சினை சரியாகிவிடும். உடன்பிறப்புகளோடு இணைந்து செய்த தொழிலில் ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். இதுவரை விற்க முடியாமல் இருந்த அசையாச் சொத்துக்களை, நல்ல விலைக்கு விற்று லாபம் காண்பீர்கள். அதைக் கொண்டு கடன்களை அடைத்து, வசதிகளை பெருக்கிக்கொள்வீர்கள்.

சப்தம ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால், கல்யாண முயற்சிகள் கைகூடும். வாசல் வரை வந்து திரும்பிச் சென்ற வரன்கள், மீண்டும் வந்து திருமணத்தில் முடியலாம். மனதிற்கினிய பயணங்கள் ஏற்படும். வெளிநாடு சென்று பணிபுரிய எடுத்த முயற்சிகள் கைகூடும். பொதுவாக சப்தம ஸ்தானத்தைக் குரு பார்த்தால், முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும்.

சனியின் வக்ரமும், பெயர்ச்சிக் காலமும்

25.5.2022 முதல் 9.10.2022 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகிறார். இந்த காலகட்டத்தில் தொழில் மற்றும் உத்தியோகத்தில் மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை. எதிரிகளின் பலம் கூடும். உயர் அதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். பணிச்சுமைக்கேற்ற ஊதியம் கிடைக்காதவர்கள், சுய தொழில் தொடங்குவது பற்றி சிந்திப்பார்கள். 29.3.2023-ல் கும்பத்திற்கு சனி பெயர்ச்சியானதும், உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானம் பலம்பெறுகின்றது. தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எனவே நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். அதே நேரம் கர்ம ஸ்தானம் பலப் படுவதால், பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில் மாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களும் வந்து சேரும்.

வளர்ச்சி தரும் வழிபாடு

சனிக்கிழமை தோறும் விரதமிருந்து அனுமன் கவசம் பாடி வழிபடுவது நல்லது. 'ஸ்ரீராமஜெயம்' எழுதுவது உகந்தது.

பெண்களுக்கான பலன்கள்

இந்தப் புத்தாண்டில் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுபச்செலவு அதிகரிக்கும். உடல்நலனில் அக்கறை தேவை. கணவன்-மனைவிக்குள் பாசம் கூடும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சனி -செவ்வாய் பார்வை காலத்தில் உடன்பிறப்பையும், உடன் இருப்பவரையும் அனுசரித்துச் செல்லுங்கள். பணிபுரியும் இடத்தில் இருந்த தொல்லை அகலும். மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். புதிய வாய்ப்புகளும் வந்து சேரும்.


Next Story