கன்னி - சனிப்பெயர்ச்சி பலன்கள்
27-12-2020 முதல் 20-12-2023 வரை
ஐந்தில் வந்தது சனிபகவான், அற்புதப் பலன்கள் இனிசேரும்! கன்னி ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் அர்த்தாஷ்டமச் சனியாகச் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 5-ம் இடத்திற்குச் செல்கின்றார். 5-ம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம். உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவர் தனது சொந்த வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் இனிய பலன்கள் ஏராளமாக வரப்போகின்றது. தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வருமானம் உயரும்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு பகவான் இருக்கின்றார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. எனவே குடும்பத்தில் சந்தோஷ வாய்ப்புகளை அதிகம் சந்திக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தை அடையும் சனி பகவானால், நல்ல மாற்றங்கள் வரப்போகின்றது. இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறும். பிரிந்து சென்ற உறவினர்கள் பிரியமுடன் வந்திணைவர். செய்தொழில் எதுவாக இருந்தாலும் முன்னேற்றம் கூடும்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், 2, 7, 11 ஆகிய மூன்று இடங்களையும் பார்க்கப் போகின்றார். வாக்கு, தனம், குடும்பம், களத்திரம், வெளிநாட்டு முயற்சி, இளைய சகோதரம், பொருளாதாரம், மாமன், மைத்துனர் வழி ஒத்துழைப்பு, சேமிப்பு, கவுரவப்பதவி போன்றவற்றைப் பற்றி எடுத்துரைக்கும் இடங்களில் சனியின் பார்வை பதிவதால், அந்த ஆதிபத்யங்களில் எல்லாம் மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரும். 2-ம் இடத்தை சனி பார்ப்பதால், பணப்புழக்கம் நன்றாக இருக்கும். சனியின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் தம்பதியர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். கல்யாண முயற்சிகளில் இருந்த தடை அகலும். சனியின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால், தொழிலில் இதுவரை இருந்த இழப்புகளை ஈடுகட்டும் விதத்தில் வியாபாரம் சூடுபிடிக்கும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, விரயங்கள் அதிகரிக்கலாம். வீடு மாற்றங்களும், இட மாற்றங்களும் இயல்பாக வந்து சேரும்.
28.12.2021 முதல் 26.1.2023வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதார நிலை உயரும். தொழிலில் லாபம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகக் கிடைக்கும். சந்திரன் உங்கள் ராசிக்கு லாபாதிபதியாக இருப்பதால் இக்காலத்தில் பணப்பற்றாக்குறை ஏற்படாது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் மீது சுமத்திய குற்றங்களில் இருந்து விடுபட்டு மீண்டும் பணியில் சேருவர்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. செவ்வாய் உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். எனவே முன்னேற்றத்தில் சிறுசிறு சறுக்கல்கள் வரலாம்.
குருப்பெயர்ச்சிக் காலம்
கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, 'சகட யோக' அடிப்படையில் பலன் கிடைக்கும். ஒரு தொகை செலவழிந்த பிறகே அடுத்த தொகை உங்கள் கரங்களில் புரளும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது மிகச்சிறந்த பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. வருமானம் மிதமிஞ்சியதாக இருக்கும். மேஷ குருவின் சஞ்சார காலத்தில் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். மறைவிடங்களில் பாம்பு கிரகங்கள் சஞ்சரிக்கும் பொழுது நன்மைகளையே செய்யும். சுயபலமற்ற கிரகம் என்பதால் இருக்கும் இடத்தைப் பொறுத்தே பலன் கிடைக்கும். பண விரயம் அதிகரித்தாலும், அதற்காகப் பயப்பட வேண்டியதில்லை. தன ஸ்தானத்தில் கேது இருப்பதால் எந்த வகையிலாவது உங்களுக்கு வருமானம் வந்து சேரும். தேங்கிய காரியங்கள் நடைபெறும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. தொழிலில் மாற்றம் செய்தால் நல்லது என்று நினைப்பீர்கள். குடும்பச்சுமை கூடும்.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் எதிர்பாராத மாற்றங்கள் இல்லம் தேடி வரும். ஜென்மத்தில் கேது இருப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் அதிக தொல்லைகள் ஏற்படலாம். நினைத்த காரியத்தை செய்துமுடிக்க இயலாமல் உடல்நலத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் கூடும். எதையும் யோசித்துச் செய்வது நல்லது.
வெற்றி பெறவைக்கும் வழிபாடு
வியாழன் தோறும் விரதம் இருந்து குரு வழிபாட்டை மேற்கொள்வதோடு, இல்லத்துப் பூஜை அறையில் குரு பகவான் படம் வைத்து, குரு கவசம் படித்து வழிபடுவது நல்லது. குடும்ப முன்னேற்றம் கூடும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி வக்ரமடைகின்றார்.
உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். எனவே நெஞ்சம் மகிழும் சம்பவங்களும், அஞ்சும்படியான சம்பவங்களும் நடைபெறும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. தொழிலில் ஏற்றங்கள் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் விரயங்கள் ஏற்படலாம். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சி தரும் பெயர்ச்சியாகவே அமையும். பொருளாதார நிலை உயரும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. செய்தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். தாய், தந்தை உறவு மேம்படும். சகோதரர்கள் உங்கள் எண்ணங்களைப் பூர்த்தி செய்வர். பிள்ளைகளின் கல்யாண வாய்ப்பு கைகூடும். மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன்தரும். பணிபுரியும் பெண்களுக்கு இனி வேலைப்பளு குறையும். எதிர்பார்த்த இடமாற்றம், இலாகா மாற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும்.