வார ராசிபலன் 02.02.2025 முதல் 08.02.2025 வரை


weekly rasi palan in tamil
x

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்

இந்த வார ராசிபலன்

மேஷம்

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை அவர் அடி தொழ மறுப்பவருக்கு விமோசனம் இல்லை என்ற கொள்கைப்படி நடக்கும் மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் மனதிற்கு இனிய சம்பவங்கள் நிகழும்.மனதில் புதிய உற்சாகம் ஏற்பட்டு சுறுசுறுப்பாக செயல்படும் காலகட்டம் இது. குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை பழைய கடன்களை அடைந்து புதிய கடன் பெறும் சூழல் ஏற்படும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகளுக்கு லாபகரமான காலகட்டம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியிடங்களில் பணி சம்பந்தமான விஷயங்களை மட்டும் கவனிப்பது நல்லது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி மற்றும் பணி வாய்ப்புகள் உருவாகும். ஜலதோஷம், இருமல் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் அகலும். உடன் பிறந்த சகோதர சகோதரிகள் வீட்டிற்கு பரிசு பொருள்களோடு சென்று அவர்கள் மனம் மகிழும்படி செய்தால் பல நன்மைகள் உண்டு.

ரிஷபம்

வேலை என்று வந்துவிட்டால் நான் வேறு எதையும் நான் கவனிக்க மாட்டேன் என்ற கொள்கையை மனதில் கொண்டு செயல்படும் ரிஷபம் ராசியினருக்கு இந்த வாரம் எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும். ஆன்மிக எண்ணங்கள் மனதில் குடியேறும் காலகட்டம் இது. குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை தன வரவும், ஆடை ஆபரண சேர்க்கையும் உண்டு. தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறலாம். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவர். உடல் நலனை பொறுத்தவரை அடிவயிற்று பகுதியில் வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை மூலம் அகலும். தந்தை வழி உறவினர்களுடன் சுமுகமாக நடந்து கொள்வதும் அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வதும் பல நன்மைகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.

மிதுனம்

ஆடாத ஆட்டம் ஆடினாலும் காரியத்தில் எப்போதும் கண்ணாக உள்ள மிதுனம் ராசியினர் இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்பட்டு காரிய வெற்றி அடைவர். குடும்ப பொருளாதார நிலையில் செலவுகளை திட்டமிட்டு சமாளிக்க வேண்டும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் காலகட்டம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் புது இடங்களில் கிளைகளை தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் பெறுவர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் புதுமையாக சிந்தித்து, திறமையாக செயல்படுவர். உடல் நலனை பொறுத்தவரை காய்ச்சல், கை கால் வலி ஏற்பட்டு தக்க சிகிச்சை மூலம் குணமடையும். தூய்மை பணியாளர்கள், உடல் ஊனமுற்றோர், வயது முதிர்ந்தோர் ஆகியோர்களுக்கு தேவையான உதவிகளை பொருளாகவோ அல்லது உணவாகவோ வழங்கினால் பல நன்மைகள் உண்டு.

கடகம்

மாற்றம் ஒன்றே இந்த பூமியில் மாறாத ஒன்று என்ற தத்துவத்தை வாழ்க்கையின் அடிநாதமாக கடைபிடிக்கும் கடகம் ராசியினருக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை பழைய கடன்களை திருப்பி செலுத்தி விடுவீர்கள். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் நீண்ட நாட்களாக திட்டமிட்ட விஷயங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பர். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் புதிய மாற்றங்களை எதிர்கொள்வர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு புதிய இடங்களுக்கு செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடிவயிற்றில் அல்லது மார்பில் வலி ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். வயது முதிர்ந்த தம்பதிகளுக்கு பரிசுப் பொருள் தந்து அவர்களுடைய ஆசிகளை பெறுவதும், புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு இனிப்பு, மலர்கள் ஆகியவற்றை பரிசாக கொடுப்பதன் மூலம் பல நன்மைகள் வந்து சேரும்.

சிம்மம்

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற கொள்கையை மனதில் வைத்து நடக்கும் இயல்பு கொண்ட சிம்ம ராசியினருக்கு இந்த வாரம் எண்ணிய காரியங்கள் எண்ணியபடி நடந்தேறும். நீண்ட நாட்களாக இருந்த ஒரு சிக்கல் விலகும் காலகட்டம் இது. குடும்ப வருமானம் பெருகும். தான தர்மங்களை செய்வர். தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் நீண்ட நாளாக எதிர்பார்த்த முன்னேற்றம் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை மட்டும் கவனமாக செய்து வர வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு மகிழ்ச்சியாக இருக்கும் அளவுக்கு பாடங்களில் அதே கவனம் செலுத்த வேண்டும். வண்டி வாகனங்களில் நிதானமாக செல்வது அவசியம். இயன்றவரை வெளியிடங்களில் சுகாதாரமற்ற நிலையில் பானங்களை பருக வேண்டாம். ஆதரவற்ற விதவைப் பெண்களுக்கு இயன்றவரை பொருளாகவோ அல்லது ஆடைகளாகவோ தானம் செய்வதன் மூலம் பல நன்மைகள் வந்து சேரும்.

கன்னி

கடமை கண் போன்றது காலம் பொன் போன்றது என்ற தத்துவத்தை மனதில் கொண்டு செயல்படும் கன்னி ராசியினருக்கு இந்த வாரம் தன வரவு அதிகரிக்கும். புதிய நண்பர்கள் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். குடும்ப நிலையில் வாழ்க்கை துணையிடம் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் கடந்த கால அனுபவங்களில் இருந்து பெற்ற அனுபவம் மூலம் சிக்கல்களை தீர்ப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பை பெறுவர். பள்ளி கல்லூரி மாணவர்கள் கூடுதல் கவனத்தோடு பாடங்களை படிக்க வேண்டும். அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்பட்டு விலகும். துறவிகளிடம் ஆசி பெறுவது மற்றும் பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்களுக்கு பரிசுகள் கொடுத்து அவர்களுடைய ஆசிகளை பெறுவதும் பல நன்மைகளை ஏற்படுத்தும்.

துலாம்

ஆற்றில் போட்டாலும் அளந்து தான் போட வேண்டும் என்ற பழமொழியை வாழ்க்கையின் ஆதாரமாக கொண்ட துலாம் ராசியினருக்கு இந்த வாரம் நீண்ட நாள் கனவு பலிக்கும். மனதில் நிம்மதி ஏற்படும் வாரம் இது. குடும்பத்தில் சுபகாரிய செலவு ஏற்படும். தொழில்துறையினர், வியாபாரிகள் வர்த்தக விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு பெறுவர். உத்தியோகஸ்தர்கள் மருத்துவ செலவுக்காக நண்பர்களிடம் கடன் பெற்று சமாளிப்பர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு உற்சாகமாக இருப்பார்கள். மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் கவனமாக மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அனாதை ஆசிரமங்களுக்கு தேவையான சமையல் பாத்திரங்கள் அல்லது சமையல் பொருட்களை தானமாக அளிப்பதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும்.

விருச்சிகம்

எந்த ராஜா எந்த நாட்டை ஆண்டாலும் நமது வேலையை நாம் செய்தால்தான் நமது பிழைப்பு நகரும் என்ற தத்துவத்தை உணர்ந்த விருச்சிகம் ராசியினருக்கு இந்த வாரம் சமூக அந்தஸ்தும், மதிப்பும் அதிகரிக்கும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை வரவுக்கு தக்க செலவு ஏற்படும். தொழில்துறையினர், வியாபாரிகள் வெளியூர் பிரயாணங்களை மேற்கொள்வர். உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணி உயர்வை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து திட்டமிட வேண்டிய காலகட்டம் இது. உடல் நலனை பொறுத்தவரை வயதானவர்கள் மருத்துவ ஆலோசனை பெறுவது மற்றும் மருந்து மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். தந்தை வழி மற்றும் தாய் வழி மாமா உறவினர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும் அவர்களுடைய ஆசிகளை பெறுவதும் பல நன்மைகளை ஏற்படுத்தும்.

தனுசு

ஆற்றை கடக்கும் வரை அண்ணன் தம்பி அதன் பிறகு நீ யாரோ நான் யாரோ என்ற உலகத்தின் இயல்பை அறிந்துள்ள தனுசு ராசியினர் இந்த வாரம் முயற்சிகளில் தடைகளை சந்தித்து வெற்றி பெறுவர். பல காரிய வெற்றிகளை அடையக்கூடிய காலகட்டம் இது. குடும்ப நிலையைப் பொறுத்தவரை கையில் இருக்கும் சேமிப்பு கரையும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் தடை தாமதங்களை சந்தித்து அதில் இருந்து விடுபட வேண்டும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவை பெற்று செயல்படுவார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவர். உடல் நலனை பொறுத்தவரை கைகால் வலி, உடல் அசதி ஏற்பட்டு சரியாகும். கோவில் வாசலில் அமர்ந்துள்ள ஆதரவற்ற வயது முதிர்ந்த பெரியவர்களுக்கு ஆடை தானம் அல்லது அன்னதானம் செய்வதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும்.

மகரம்

ராமனைப் போன்று ஒரு ராஜா இருந்தால் அவனுக்கு அனுமனை போன்று ஒரு சேவகன் இருப்பான் என்பதை சொந்த வாழ்க்கையில் உணர்ந்த மகரம் ராசியினருக்கு இந்த வாரம் மனதில் புதிய நம்பிக்கைகள் உருவாகும். தெய்வ அனுக்கிரகத்தை பெற்று தரும் காலகட்டம் இது. குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை பழைய கடன் தீர்த்து புதிய கடன் ஏற்படும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் சமூக மதிப்பை பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஏற்று சுறுசுறுப்பாக செயல்படுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தனித்திறமைகளை வெளிக்காட்டி பாராட்டு பெறுவார்கள். உடல் நலனை பொறுத்தவரை மன உளைச்சல் மற்றும் உழைப்பு காரணமாக அசதி ஏற்படும். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை எளியவர்களுக்கு முடிந்தவரை மருத்துவ உதவிகளை செய்வதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும்.

கும்பம்

எல்லோருமே பல்லக்கு ஏறினால் பல்லக்கை தூக்குபவர் யார் என்ற நடைமுறை உண்மையை அறிந்து நடந்து கொள்ளும் கும்பம் ராசியினருக்கு இந்த வாரம் புதிய நம்பிக்கைகள் ஏற்படும். பழைய கடன்கள் தீரக்கூடிய வாரம் இது. குடும்ப பொருளாதார நிலையில் தடைகள் இருந்தாலும் எப்படியோ சமாளித்து விடுவீர்கள். தொழில்துறையினர், வியாபாரிகள் கடந்த காலங்களில் சந்தித்து வந்த சிக்கல்கள் விலகி லாபம் அடைவர். உத்தியோகஸ்தர்கள் வேறு நல்ல பணி வாய்ப்புகள் குறித்த தகவல்களை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேடிக்கை விளையாட்டுகளில் இருந்து விலகி பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும். உடல் நலனில் ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் ஏற்பட்டு விலகும். மனைவி வழி உறவினர்களுக்கு இயன்றவரை உதவிகள் செய்வதும், வாழ்க்கை துணைக்கு பிடித்தமான விஷயங்களை செய்வது, அவர் விரும்பிய பொருளை வாங்கித் தருவது ஆகியவற்றால் கிரக காரக நன்மைகள் ஏற்படும்.

மீனம்

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்ற பழமொழியின் உண்மை அர்த்தத்தை உணர்ந்து கொண்ட மீனம் ராசியினருக்கு இந்த வாரம் பல அலைச்சல்களுக்கு பின்னர் காரிய வெற்றி ஏற்படும். பெண் தொழில் முனைவோர் பல நன்மைகளை பெற்று மகிழ்வார்கள். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை செலவுகளை எப்படியோ சமாளித்து குடும்பத்தை நகர்த்துவீர்கள். தொழில் துறையினர், வியாபாரிகள் பொருட்கள் கொள்முதல் செய்வதில் வழக்கத்தை விட குறைவாக செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மனதிற்கு இனிய பணிச்சூழலில் பணியாற்றுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களது ஆசிகளை பெறுவது வெற்றிக்கு வழிவகுக்கும். தூய்மைப் பணியாளர்கள், செருப்பு தைப்பவர்கள் ஆகியோர்களுக்கு அன்னதானம் அல்லது பொருள் தானம் இயன்றவரை செய்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.




1 More update

Next Story