ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர் 4 வி அறிமுகம்


ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர் 4 வி அறிமுகம்
x

இந்தியாவில் அதிக மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் புதிதாக எக்ஸ்ட்ரீம் 160 ஆர் 4 வி என்ற பெயரிலான புதிய மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. முந்தைய எக்ஸ்ட்ரீம் மாடல் மோட்டார் சைக்கிள் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் அதில் மேம்பட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டு புதிதாக இந்த மாடல் மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று வேரியன்ட்கள் (ஸ்டாண்டர்டு – விலை சுமார் ரூ.1,27,300, கனெக்டட் 2.0 விலை சுமார் ரூ.1,32,800, புரோ – விலை சுமார் ரூ.1,36,500) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த மோட்டார் சைக்கிள் 163 சி.சி. திறன் கொண்ட 4 வால்வுகளை உடைய ஏர் கூல்டு என்ஜினைக் கொண்ட தாகும். இதில் பாரத் புகை விதிகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான என்ஜின் உள்ளது. 8,500 ஆர்.பி.எம். சுழற்சியில் 16.9 பி.எஸ். திறனை வெளிப்படுத்தும். இதனால் ஸ்டார்ட் செய்த 4.41 விநாடிகளில் 60 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். 37 மி.மீ. அளவிலான முன்புற சஸ்பென்ஷன் மற்றும் 7 நிலை களில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் பின்புற மோனோ ஷாக் அப்சார்பரைக் கொண்டுள்ளது. இதன் எடை 144 கி.கி. ஆகும். ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிளுக் குரிய கம்பீரமான தோற்றத்தைக் கொண்டுள்ளது.

அதேசமயம் பாதுகாப்பான, சொகுசான பயணத்தை உறுதி செய்யும் வகையில் இதன் சீட் வடிவமைக்கப்பட்டுள்ளது. முகப்பு விளக்கு மற்றும் பின்புற விளக்குகள் எல்.இ.டி.யால் ஆனது.

புளூடூத் இணைப்பு, பேட்டரி, வாகன சர்வீஸ், எந்த கியரில் வாகனம் செல்கிறது என்பதையும், என்ஜினில் கோளாறு ஏற்பட்டாலும் செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) விவரங்களை மோட்டார் சைக்கிளின் முன்புறத்தில் உள்ள ஸ்பீடா மீட்டரிலேயே தெரிந்து கொள்ள முடியும். இதுபோன்ற 20 விதமான செயல்பாடுகளைக் கொண்டதாக நிறுவனத்தின் செயலி உள்ளது.

ஹீரோ கனெக்ட் செயலி மூலம் 25-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளிப்படுத்தும். அவசரகால செய்திகளை இந்த செயலி உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பும். எரிபொருள் தீர்வது, அதிக வேகத்தில் செல்வது உள்ளிட்ட அறிவுறுத்தலையும் அளிக்கும். நேவிகேஷன் வசதி உள்ளதால் நெரிசலான பார்க்கிங் பகுதியில் வாகனத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியும். நண்பர்கள், உறவினர் களிடம் வாகனத்தைக் கொடுத்துவிட்டால், அவர்கள் எங்கு பயணிக்கிறார்கள் என்று கண்காணிக்க முடியும். வாகனம் பழுதடைந்து ஆளில்லா பகுதியில் சிக்கிக்கொண்டால், அது பற்றிய தகவலை மற்றவர்களுக்கு அனுப்பும் வசதியும் இதில் உள்ளது. சிவப்பு, கருப்பு, உள்ளிட்ட நிறங்களில் இது கிடைக்கும்.


Next Story