கவாஸகி எம்.ஒய் 23 நின்ஜா 300 அறிமுகம்
கவாஸகி நிறுவனம் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது
பிரீமியம் மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கும் கவாஸகி நிறுவனம் புதிதாக எம்.ஒய் 23 நின்ஜா 300 என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. எலுமிச்சை பச்சை, கேண்டி எலுமிச்சை பச்சை, மெடாலிக் மூன்டஸ்ட் கிரே ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். எலுமிச்சை பச்சை நிறம் அடிப்படை வண்ணமாகவும், அதில் கருப்பு நிற கிராபிக் மற்றும் சிவப்பு வண்ணங்கள் ஆங்காங்கே பளிச்சிடும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம் (ஏ.பி.எஸ்.) வசதி உள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் 296 சி.சி. திறன் கொண்ட இரட்டை சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. டி.ஓ.ஹெச்.சி. நான்கு ஸ்டிரோக் என்ஜின் 8 வால்வுகளைக் கொண்டது. டெலஸ்கோப்பிக் போர்க், சிறிய சைலென்ஸர் உள்ளிட்ட பல அழகிய வடிவமைப்புகள் வாகனத்துக்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது. பியூயல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் உள்ளதால் இது 39 பி.எஸ். திறனையும், 26.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும்.
மோட்டார் சைக்கிளின் என்ஜின் லிக்விட் கூல்டு வகையைச் சேர்ந்தது. உறுதியான டயமண்ட் ஸ்டீல் பிரேம், ஸ்லிப்பர் கிளட்ச் வசதி கொண்டது. வாகனம் அதிக சூடேறுவதைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் இந்த மோட்டார் சைக்கிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு டயல் இன்ஸ்ட்ரூ மென்டேஷன் பலவித செயல்பாடுகளைக் கொண்ட எல்.சி.டி. இதில் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.3,43,000.