மிதுனம் - புரட்டாசி தமிழ் மாத ஜோதிடம்


மிதுனம் - புரட்டாசி தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 18 Sept 2023 12:15 AM IST (Updated: 18 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாத ராசி பலன்கள் 18-09-2023 முதல் 17-10-2023 வரை

பிறருடைய பிரச்சினைகள் தீர வழிசொல்லும் மிதுன ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதே நேரத்தில் சனி வக்ர இயக்கத்தில் அஷ்டமத்துச் சனியாகவும் வருகிறார். எனவே ஒருசில காரியங்கள் விரைவில் முடியும் என்றாலும், ஒரு சில காரியங்களில் தடைகளும், தாமதங்களும் வரத்தான் செய்யும். 'நினைத்தது நிறைவேறவில்லையே' என்ற கவலை அகல, வழிபாடுகளை அவ்வப்போது மேற்கொள்வது நல்லது.

புதன் வக்ரம்

புரட்டாசி 10-ந் தேதி, கன்னி ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். அதே நேரத்தில் அந்த வீடு புதனுக்கு உச்ச வீடாகும். உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதன் புதன் உச்சம் பெறுவது யோகம்தான். ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் தகவல்கள் அதிகம் கிடைக்கும். எதிர்பாராத விதத்தில் இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். வாடகை கட்டிடத்தில் நடைபெறும் தொழிலாக இருந்தால் அதைச் சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் யோகம் உண்டு. மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறு வதற்கான அறிகுறிகள் தென்படும். பூமி யோகம் முதல், புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வரும் சூழ்நிலைகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்.

துலாம் - செவ்வாய்

புரட்டாசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு செவ்வாய் வருகிறார். 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்போது, பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். தாய்வழி ஆதரவு உண்டு. புதிய வாகனங்கள் வாங்க வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறும். நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெற வேண்டுமானால் நாம் வழிபாட்டில் கவனம் செலுத்தவேண்டும். அந்த அடிப்படையில் செவ்வாயால் நற்பலன்கள் பெற முருகப்பெருமானை வழிபடுவது நல்லது. பத்திரப் பதிவிலோ, மனை கட்டுவதிலோ தடையாக இருந்தவர்களுக்கு இப்பொழுது காரியங்கள் துரிதமாக நடைபெறும்.

துலாம் - புதன்

புரட்டாசி 28-ந் தேதி, துலாம் ராசிக்குப் புதன் வருகிறார். உங்கள் ராசிநாதன் புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்போது யோகமான நேரம் தான். நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவை பூர்த்தியாகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். பணப் புழக்கத்திற்கு குறைவு ஏற்படாது. பாதியில் நின்ற பணிகள் ஒவ்வொன்றாக முடிவடையும். பிள்ளைகளின் கல்யாண முயற்சிகளும், கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகளும் நிறைவேறும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய பாதை புலப்படும். வியாபாரம், தொழில் செய்பவர்கள் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு முன்னேற்றப் பாதை புலப்படும். மாணவ- மாணவிகளுக்கு பாடுபட்டதற்கேற்ற பலன் உண்டு. பெண்களுக்கு கணவன் - மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-செப்டம்பர்: 27, 28, அக்டோபர்: 1, 2, 8, 9, 14, 15.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.


Next Story