பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு: மத்திய அரசு அதிரடி


பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு:  மத்திய அரசு அதிரடி
x
தினத்தந்தி 21 May 2022 1:18 PM GMT (Updated: 21 May 2022 2:29 PM GMT)

இந்த வரிக்குறைப்பின் மூலம் பெட்ரோல், ஒரு லிட்டர் ரூ. 9.5-ம், டீசல் ரூ. 7-குறையும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது.இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறியுள்ளது. நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், வாகன ஓட்டிகளுக்கு இனிப்பான செய்தியாக பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது.

அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8 ம், டீசல் மீதான காலால் வரி லிட்டருக்கு 6 -ம் குறைக்கப்படுவதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த வரிக்குறைப்பின் மூலம் பெட்ரோல், ஒரு லிட்டர் ரூ. 9.5-ம், டீசல் ரூ. 7-குறையும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் மேலும் கூறியிருப்பதாவது; " கலால் வரிக் குறைப்பின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். ஏழை எளிய மக்களுக்கு மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், மாநில அரசுகளும் வரிக்குறைப்பை அமல்படுத்த வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். குறிப்பாக கடந்த முறை (நவம்பர்) வரியைக் குறைக்காத மாநிலங்கள் வரிகுறைப்பு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் 12 கேஸ் சிலிண்டருக்கு ஒரு ஆண்டுக்கு தலா ரூ. 200 மானியம் அளிக்கப்படும். இறக்குமதி சார்ந்த பிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்கான சுங்க வரியும் குறைக்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகளையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.


Next Story