
சிறுமிக்கு பாலியல் தொல்லை: கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகிகள்
சேலம் பனங்காடு ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார். தேக்வாண்டோ பயிற்சியாளரான இவர், 10க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். மாணவிகளை வெளிமாவட்டங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு அழைத்து செல்வது வழக்கம். கடந்த 6ம் தேதி, பயிற்சிக்காக வெளி மாவட்டத்தில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்க, மாணவிகளை அழைத்து சென்றார்.
விஜயகுமாரின் உறவினர் இறந்ததாக வந்த தகவலை தொடர்ந்து, மாணவிகளை விஜயகுமாரின் தம்பி கணேசன் பொறுப்பில் விட்டு, துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுவிட்டார். இந்நிலையில் இரவு, கணேசன் பயிற்சிக்கு சென்ற 14 வயது மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மாணவி அதிர்ச்சியடைந்து பெற்றோரிடம் கூறுவதாக தெரிவித்துள்ளார். உடனே பயத்தில் கணேசன், சகோதரர் விஜயகுமாரை தொடர்பு கொண்டு, இந்த விவகாரத்தை தெரிவித்துள்ளார்.
அவர் பயிற்சி நடைபெறும் இடத்துக்கு வந்து, அந்த 14 வயது மாணவியின் செல்போனை பறித்து கொண்டு, வீட்டில் இதுபற்றி கூறக்கூடாது என மிரட்டியுள்ளார். இந்நிலையில், அந்த மாணவி, தோழியின் செல்போனை வாங்கி, தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கவிதா, போக்சோ வழக்குப்பதிவு செய்து பயிற்சியாளர் விஜயகுமாரை கைது செய்தார்.
தலைமறைவான விஜயகுமாரின் தம்பி கணேசன் போலீசில் சரணடைந்தார். கைது செய்யப்பட்ட விஜயகுமார், அதிமுக கிழக்கு ஒன்றியத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் ஒன்றிய இணை செயலாளராக உள்ளார். சரணடைந்த அவரது தம்பி கணேசன் ஆண்டிப்பட்டியில் அதிமுக கிளை செயலாளராக உள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.






