
கர்நாடகா: விஷம் வைத்து கொல்லப்பட்ட புலிகள் - 6 பேரிடம் வனத்துறை விசாரணை
கர்நாடகா மாநிலம் மகாதேஸ்வரன் மலை புலிகள் காப்பகத்தில் தாய் புலி மற்றும் அதன் 4 குட்டிகளும் விஷம் வைத்து கொள்ளப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கல்லேப்போட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவன்னா உள்பட 6 பேரை வனத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த புலிகளுக்கு அருகே இருந்த பசுவின் சடலத்தை பரிசோதித்த அதிகாரிகள், அப்பசுவின் உடலில் விஷம் கலந்திருந்ததாகவும், அது சிவன்னாவின் பசு என்றும் தெரிவித்துள்ளனர்.
தனது பசுவை கொன்ற புலிகளை கொல்ல, மற்றொரு பசுவுக்கு விஷம் கொடுத்து வனப்பகுதிக்குள் அனுப்பியநிலையில், புலிகள் அதனை வேட்டையாடி சப்பிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே மர்மமான முறையில் உயிரிழந்த 5 புலிகளின் சடலங்கள் உடற்கூராய்வுக்குப் பிறகு எரியூட்டப்பட்டன. புலிகளின் உறுப்புகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.. ஆய்வுக்குப் பிறகு விஷம் வைத்துதான் புலிகள் கொல்லப்பட்டுள்ளதா? என்பது தெரியவரும் என மாநில வன அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையமும் (NTCA) விசாரணையை தொடங்கி உள்ளது.






