
மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் தமிழ்நாட்டு மண்ணில் நிகழும் - த.வெ.க. தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந்தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. மாநில மாநாட்டை முன்னிட்டு த.வெ.க. தொண்டர்களுக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர், "மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்குத் திரும்பும்போதும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகம், தகுதியும் பொறுப்பும் மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை. மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் நம் தமிழ்நாட்டு மண்ணில், நம்மால் நிகழப் போவது நிஜம். எனவே, அத்தகைய மாபெரும் அரசியல் விளைவை நிச்சயமாக நிகழ்த்திக் காட்டும் பேரறிவிப்பாக நமது மாநில மாநாட்டை மாற்றிக் காட்டுவோம்" என்று தெரிவித்துள்ளார்.






