
வடகிழக்கு பருவமழை தீவிரம்; கண்காணிப்பு அதிகாரிகள் 12 பேர் நியமனம்
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் சென்னை, திருவள்ளுர், காஞ்சீபுரம் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை குறித்தும், முன்னேற்பாடுகள் குறித்தும் மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி வாயிலாக இன்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞசை, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு / சிவப்பு எச்சரிக்கை விட்டுள்ளது. இந்த நிலையில், இந்த மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.






