
நெல் கொள்முதலில் திமுக அரசு படைத்திருப்பது சாதனை அல்ல... கொடும் வேதனை - அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டில் விவசாயிகளிடம் அதிமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டதை விட மிகவும் அதிகமாக ஆண்டுக்கு சராசரியாக 42 லட்சத்து 61 ஆயிரத்து 386 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும், இது பெரும் சாதனை என்றும் திமுக அரசு கூறியிருக்கிறது. அரும்பாடுபட்டு விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் வேதனையை தங்களின் சாதனை என திமுக அரசு தம்பட்டம் அடித்துக் கொள்வது கண்டிக்கத்தக்கது.
காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யப்படாததாலும், மழையில் நனைந்து நெல் வீணாணதாலும் உழவர்கள் கண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றனர். அதைத் துடைக்க திமுக அரசு எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. மாறாக கடந்த கால புள்ளிவிவரங்களை காட்டி திமுக அரசு புளங்காகிதம் அடைந்து கொள்கிறது. இந்த வெற்று புள்ளிவிவரங்களால் காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு எந்த பயனும் இல்லை.
எனவே, ஒன்றுக்கும் உதவாத கணக்குகளைக் கூறுவதை விடுத்து காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதலை தீவிரப்படுத்தி, உழவர்களின் கண்ணீரைத் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 20 நாள்களுக்கும் மேலாக கண்ணீரில் மிதக்கும் காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் விடும் சாபம் திமுக ஆட்சியாளர்களை சும்மா விடாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






