
டி.என்.பி.எல். போட்டி தொடரில் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று கடைசி சுற்று போட்டிகள் நடக்கின்றன. இதன்படி இன்று நடக்கும் 25-வது லீக் போட்டியில் பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்சை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து மதுரை அணி முதலாவதாக பேட்டிங் செய்ய இருந்தது. இந்த நிலையில், போட்டி நடைபெறும் திண்டுக்கல் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் திடீரென மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கப்பட்டது. தாமதம் காரணமாக ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.
தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அதீக் அர் ரகுமான் 41 ரன்களும், முருகன் அஸ்வின் 38 ரன்களும் எடுத்தனர். கேப்டன் சதுர்வேத் 31 ரன்களில் சிலம்பரசன் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.
சேப்பாக் அணியை பொறுத்தவரை விஜய்சங்கர் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுதவிர சிலம்பரசன் 2 விக்கெட்டுகளும், ரோகித் மற்றும் அபிஷேக் தன்வர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சேப்பாக் அணி விளையாடி வருகிறது.






