
ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு அறிவிப்பு: காங்கிரஸ் எம்.பி. விமர்சனம்
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ 6.5 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார மந்தநிலையை போக்கும் வகையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கியின் இந்த வட்டி குறைப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வட்டி குறைப்பு அறிவிப்பு குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறுகையில், மத்திய அரசு திக்கற்று நிற்பது அனைவருக்கும் தெரியும் என்றும், தேர்தலுக்காக மட்டுமே இப்போது விழித்துக்கொண்டு ஏதாவது செய்கிறார்கள் என்றும் விமர்சனம் செய்தார்.
தலைப்புச் செய்தியில் இடம்பெறுவதை மட்டுமே அரசாங்கம் விரும்புகிறது, உண்மையான பிரச்சினைகளை தீர்க்க விரும்பவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.






