
தீபாவளி பண்டிகை: ஈரோட்டில் இருந்து வெளியூர்களுக்கு 320 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 18-ந் தேதியில் இருந்து வார இறுதி நாட்கள் தொடங்குவதால், தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் முன்கூட்டியே சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.
அதன்படி அரசு போக்குவரத்துக்கழக ஈரோடு மண்டலம் சார்பில் நாளை மறுநாளில் இருந்து ஈரோடு மாவட்டத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஈரோட்டில் இருந்து மதுரை, சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஈரோட்டில் இருந்து மதுரைக்கு நாளை மறுநாள் 24 பஸ்களும், சேலம், நாமக்கல் ஆகிய ஊர்களுக்கு தலா 10 பஸ்களும், திருச்சிக்கு 13 பஸ்களும் கூடுதலாக இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், 17-ந் தேதி முதல் 20-ந் தேதி அதிகாலை வரை மதுரைக்கு 35 பஸ்களும், சேலம், நாமக்கல் ஆகிய ஊர்களுக்கு தலா 15 பஸ்களும், திருச்சிக்கு 22 பஸ்களும் இயக்கப்படும். மேலும், மதுரையை கடந்து செல்லும் ஊர்களான திருச்செந்தூர், நாகர்கோவில், நெல்லை, ராமேசுவரம் போன்ற ஊர்களுக்கு பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து தினமும் 10 பஸ்களை கூடுதலாக இயக்க திட்டமிட்டு உள்ளோம். எனவே மொத்தம் 320 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.






