
தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரூ.1720 கோடி முதலீடு - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
“தமிழ்நாட்டில் ரூ.1,720 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த தென் கொரியாவைச் சேர்ந்த Hwaseung Enterprise நிறுவனம் இப்போது அதை ரத்து செய்து விட்டு, ஆந்திராவில் தொழிற்சாலை அமைக்க முதலீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிவதாக தி.மு.க. அரசு நடத்தி வந்த பொய்பரப்புரையின் முகமூடி இதன் மூலம் கிழிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் Hwaseung Enterprise நிறுவனம் கையெழுத்திட்டிருந்தது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த சில மாதங்களில் இந்த நிறுவனம் தமிழ்நாட்டை புறக்கணித்துவிட்டு ஆந்திராவுக்கு சென்றுள்ளது.






