
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல்; உணவு வழங்குவது கொடூரமான நகைச்சுவை: அன்புமணி ராமதாஸ்
திமுக அரசின் அடக்குமுறைகளையும் கடந்து, எதற்கும் அஞ்சாமல் தூய்மைப் பணியாளர்கள் அவர்களின் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். அவர்களின் போராட்டம் இன்று 107-ம் நாளை எட்டியிருக்கிறது. ஆனால் இன்று வரை தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கு கூட முன்வரவில்லை. அதற்கு காரணம் ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் குப்பை அள்ளும் பணிக்கான ரூ.2,300 கோடி ஒப்பந்ததை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்ப்பதன் மூலம் தங்களுக்கு கிடைக்கும் ஆதாயங்களை இழக்க ஆட்சியாளர்கள் விரும்பாதது தான்.
ஆனால் தூய்மைப் பணியாளர்களுக்கு இழைத்த துரோகத்தை மறைப்பதற்காக அவர்களுக்கு உணவு வழங்கும் நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றியிருக்கிறது. ஏற்கனவே திமுகவைச் சேர்ந்த சிலரை தூய்மைப் பணியாளர்கள் போர்வையில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி முதல்-அமைச்சரை சந்திக்க வைத்து திமுக அரசின் நலத்திட்டங்களை தூய்மைப் பணியாளர்கள் வரவேற்பதைப் போன்ற புளித்துப் போன நாடகத்தை அரங்கேற்றிய ஆட்சியாளர்கள், இப்போது அடுத்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இவற்றையெல்லாம் தமிழக மக்கள் அருவருப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.






