
பா.ம.க. செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10, 11-ஆம் வகுப்பு ஆகிய இரு பொதுத்தேர்வுகளிலும் வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்திருக்கிறது. பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வேலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை, தேனி, நாகப்பட்டினம், சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் கடைசி 10 இடங்களை பிடித்திருக்கின்றன.
அவற்றில் தேனி, நாகை ஆகிய இரு மாவட்டங்களை தவிர மீதமுள்ள 8 மாவட்டங்களும் வட தமிழ்நாட்டை சேர்ந்த மாவட்டங்கள் ஆகும். அதேபோல், 11-ம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சி விகிதத்தில் கடைசி 10 இடங்களை பிடித்த மாவட்டங்கள் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகியவை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இவற்றில் புதுக்கோட்டை, நீலகிரி தவிர மீதமுள்ள மாவட்டங்கள் வட தமிழகத்திற்கு உட்பட்ட மாவட்டங்கள். தேர்ச்சி விகிதத்திலும், ஒட்டுமொத்த கல்வி நிலையிலும் வட தமிழகம் பின்தங்கியிருப்பது இப்போது ஏற்பட்ட மாற்றமல்ல. 40 ஆண்டுகளுக்கும் மேலாக இதேநிலை தான் நீடிக்கிறது.
வட தமிழ்நாடு கல்வியில் வீழ்ச்சியடைவது கண்டு அரசு கவலைப்படவில்லை. வட மாவட்டங்களுக்கு கல்வித்துறையில் எப்போது விடியல் ஏற்படும் என்பது தெரியவில்லை. கல்வியில் வட தமிழ்நாடு முன்னேறவில்லை என்றால், எந்த துறையிலும் ஒட்டுமொத்த தமிழகமும் முன்னேற முடியாது. இதனை தமிழக அரசு உணர்ந்து கொண்டு வட மாவட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும், அந்த மாவட்டங்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்பு திட்டங்களை வகுத்து தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.