
சாதிப் பெயர்களை நீக்கக் கோரிய அரசாணை: இறுதி முடிவு எடுக்க ஐகோர்ட்டு தடை
சாலை, தெருக்களின் பெயர்களில் உள்ள சாதியப் பெயர்களை நீக்க தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், சாதிப் பெயர்களை நீக்கக் கோரிய அரசாணையை செயல்படுத்துவதில் இறுதி முடிவு எடுக்க கூடாது என்று ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.
"முன்னறிவிப்பு இன்றி செய்தால் மக்களிடையே குழப்பம் ஏற்படாதா?" என நீதிபதிகள் அனிதா சுமந்த், குமாரப்பன் அமர்வு கேள்வி எழுப்ப, “டெல்லி, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் மாற்றம் செய்யும் போது வராத குழப்பம், இங்கே எப்படி வந்துவிடும்" என அரசுத் தரப்பு பதில் அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தெருக்களுக்கு வைக்கப்பட்ட சாதிப்பெயர்களை நீக்கக் கோரிய அரசாணையில் கள ஆய்வு மட்டுமே நடத்த வேண்டும் என்றும், அதற்கு மேல் இந்த அரசாணையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது. மேலும் மனு குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.






