
மத்திய அரசு ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் (சமக்ர சிக் ஷா அபியான்) தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடி நிதியை ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கல்வி நிதி தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக அரசு பலமுறை கடிதம் எழுதியுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு நியாயமாக தர வேண்டிய கல்வி நிதி ரூ.2,291 கோடியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. பிஎம்ஸ்ரீ, சமக்ர சிக் ஷா அபியான் திட்டத்தின் நிதியை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்றும் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தாத சூழலில், நிதியை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல என்றும் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






